2028இல் இலங்கைக்கு ஏற்படவுள்ள நிலைமை: எச்சரிக்கின்றார் சஜித்
இவ்வாறு போனால் 2028ஆம் ஆண்டுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது பெரும் சவாலாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையில், புதிய கடன் மறுசீரமைப்பின் கீழ் புதிய நிபந்தனைகளுடன் கூடிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எட்டப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், அது முன்னெடுக்கப்படாது, முந்தைய அரசாங்கத்தின் இணக்கப்பாடு அதே வடிவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மின் கட்டணம்
இது போன்ற இன்னும் பல விடயங்கள் 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' எனும் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைப்போம், ரூ.9000 கட்டணத்தை ரூ.6000 ஆகவும், ரூ.3000 கட்டணத்தை ரூ.2000 ஆகவும் குறைத்து நிவாரணம் வழங்குவதாகச் சொன்னாலும் அது எதுவும் நடக்கவில்லை.
மின்சாரக் கட்டணத்தை 15 வீதம் குறைத்தனர். இப்போது மீண்டும் 6.8 வீதத்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கப் போகின்றனர். செலவுகளைச் சரியாகக் கணக்கிடாமலே இவ்வாறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் 159 பெரும்பான்மையை வைத்துக் கொண்டு, சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடுவது ஏன் என்பதில் எமக்கு பிரச்சினை காணப்படுகின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடாமல், மாற்றத்தை வேண்டியே, தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துப் பெரும் மக்கள் ஆணையைப் பெற்றுத் தந்தனர். 2028 முதல் நாம் ரூ. 5 பில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். நமது நாட்டின் முதலீட்டுச் சூழலில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறுகிறது.
கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது, நிறுவன மற்றும் அதிகாரிகள் மற்றும் அதிகாரத்துவ தோல்வி, ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தொடர்பில் முன்கூட்டியே கணிக்க இயலாமை, வெளிப்படைத்தன்மையில் காணப்படும் பிரச்சினைகள், கட்டமைப்பு சார் பிரச்சினைகள், அரச நிறுவனங்கள் தொடர்பான பாரதூரமான பிரச்சினைகள் என குறிப்பிட்டு முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்குவதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன அதில் கூறப்பட்டுள்ளன.
வறுமை அதிகரிப்பு
நமது நாட்டின் ஆடை ஏற்றுமதிக்கான மிகப்பெரிய சந்தை வாய்ப்பைக் கொண்ட அமெரிக்கா கூட இப்போது இதைச் சொல்கிறது. நாட்டில் வறுமை அதிகரித்துள்ளது.? உலக வங்கியின் அறிக்கையின் படி, நமது நாட்டில் வறுமை மிக உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றன. வறுமை அதிர்வுகள் உருவாகி, 2019 உடன் ஒப்பிடும்போது உண்மையான ஊதியங்களும் தொழிலாளர் படை பங்கேற்பும் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றன.
ஒரு வீட்டலகின் பண்டங்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல், வேலைவாய்ப்பு உருவாக்கம் பலவீனமான மட்டத்தில் காணப்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு உயர் மட்டத்தில் காணப்படுகின்றது, உணவு பண்டங்களின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன என்று உலக வங்கி கூறுகிறது.
செல்வந்த குடும்பங்களை விட வறிய குடும்பங்கள் மூன்று மடங்கு அதிகமாக உணவுக்காகச் செலவிடுகின்றன. வறுமைக் கோட்டிற்கு உள்ளேயும், அதற்கு அண்மித்த நிலையில் ஏராளமான மக்களும் காணப்படுகின்றனர் என்று உலக வங்கி குறிப்பிடும் போது, நமது நாட்டில் 50 வீதனானோர் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர் என்று ஏழ்மை அளவீட்டுக்கான மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.
2028 இல் நாடு எப்படிக் கடனைத் திருப்பிச் செலுத்தப் போகின்றது? இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில், நமது நாடு திருப்திப்படக் கூடிய நேரடி அந்நிய முதலீட்டைப் பெறுகிறதா, புதிய தொழில்முயற்சிகளை உருவாக்குகின்றதா, வேலையின்மை விகிதத்தைக் குறைக்கின்றதா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




