ஆட்சியாளர்களுக்குச் சொர்க்கமும் மக்களுக்கு நரகமும் கொண்ட பட்ஜட்! சஜித் சாடல்
ஜனாதிபதியின் வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக ஆட்சியாளர்களுக்குச் சொர்க்கமும் மக்களுக்கு நரகமும் காட்டப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்
"வரவு - செலவுத் திட்ட உரையை ஆரம்பித்த ஜனாதிபதி பௌத்தத்தை அவமதித்தார். பிரார்த்தனை செய்ய வேண்டியவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று புத்த பகவான் கூட போதித்தார். ஆனால், தற்போதைய ஜனாதிபதி பிரார்த்தனை செய்யவில்லை.
வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் திட்டம்
இது நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி. இந்த வரவு - செலவுத் திட்டத்தில் நரகம் பற்றிப் பேசினாலும், ஆட்சியாளர்கள் சொர்க்க லோகத்தில் உள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வருவாய் இலக்குகளை நிறைவு செய்ய முடியாததால், அதன் இரண்டாவது கட்டக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், ஏனோதானே அடிப்படையில் வரவு - செலவுத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் திட்டம் பற்றிப் பேச முன், 2023 ஆம் வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளில் எத்தனை விடயங்களை நிறைவேற்ற முடிந்தது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
இன்று சமர்ப்பித்த வரவு - செலவுத் திட்ட முன்மொழிவில் பாரியளவிலான விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது." என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |