தாஜூதீன் விவகாரத்திலும் ஏமாற்றுகின்றது அநுர அரசு - சஜித் அணி கடும் விசனம்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் கர்தினால் உட்பட முழு கத்தோலிக்க மக்களையும் ஏமாற்றியுள்ள அநுர அரசு, இன்று ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் விவகாரத்திலும் அவ்வாறே செயற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் அரசால் நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகள்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில், "உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் கர்தினால் உட்பட முழு கத்தோலிக்க மக்களையும் ஏமாற்றியுள்ள அநுர அரசு இன்று விசாரணைகளை நிறைவு செய்வது இலகுவானதல்ல எனக் குறிப்பிடுகின்றது.
இதேவேளை வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான பழியை ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட கஜ்ஜா என்ற நபர் மீது சுமத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
தாஜூதீன் விவகாரம்
இந்நிலையில் கஜ்ஜா என்பவரது மகன் ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்து மேலும் பல முக்கிய விடயங்களைத் தெரிவித்திருக்கின்றார். தாஜூதீன் விவகாரத்தைப் பொலிஸ் ஊடாகப் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு அரசு முயற்சித்த போதிலும், தற்போது அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
லசந்த விக்கிரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலிகொட போன்ற ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், இதுவரையிலும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் அரசால் நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



