நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எப்போது ஒழிக்கப்படும்..! நாடாளுமன்றத்தில் சஜித் கேள்விக்கணை
திசைகாட்டியின் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம், அரசமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது எப்போது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இதனை வினவியுள்ளார்.
மக்களின் இறையாண்மை
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக் குடியரசின் இறையாண்மை மக்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்து காணப்படுகின்றது. இறையாண்மையைத் துறக்க முடியாது என்று இலங்கை ஜனநாயகக் சோசலிசக் குடியரசின் அரசமைப்புச் சட்டம் கூறுகின்றது.
மக்களின் இறையாண்மையை உட்சபட்சமாகப் பலப்படுத்த, சட்டவாக்கத்துறை, நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவை பரஸ்பர புரிதலுடனும் சுயாதீனமாகவும் செயற்பட வேண்டும். பெரும்பான்மை அதிகாரத்தைக் கொண்ட அரசின் கீழ் இந்த நிறுவனக் கட்டமைப்புகளின் சுதந்திரம் தடைப்படுவது இயல்பானதோடு, இந்த அரசின் கீழும் இதில் மாற்றத்தைக் கண்டுகொள்ள வாய்ப்பில்லை என்றே புலப்படுகின்றது.
அரசு தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்திருந்ததன் பிரகாரம், அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்று அவர்கள் கூறினாலும், இன்னும் அப்படிப்பட்ட ஒரு விடயத்திற்கு எந்த தயார் நிலையும் இல்லை என்றே தெரிகின்றது.
மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் அரசின் நேர்மையைச் சோதிப்பதற்கான அளவுகோல்களாக அமைந்து காணப்படுவன, அவற்றின் செயற்றிறனை அதிகரிக்க அறிமுகப்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் முற்போக்கான சீர்திருத்தங்கள் என்பனவாகும்.
பதில் மற்றும் விளக்கம்
இதன் பிரகாரம், நான் பின்வரும் கேள்விகளை எழுப்புகின்றேன். இவற்றுக்கு உரிய பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கின்றேன்.
01. “வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற கொள்கை அறிக்கையில் பக்கம் 194இல் குறிப்பிடப்பட்டுள்ள பிரகாரம், அரசமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ள அரசு இன்னும் எதிர்பார்க்கின்றதா? ஆமெனில், இந்த நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா? அரசமைப்பு திருத்தச் செயற்பாட்டில் இந்த நாடாளுமன்றத்தை எப்போது ஈடுபடுத்திக் கொள்வீர்?
02. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது குறித்து அரசின் கருத்து நிலைப்பாடு யாது?
03. அரசு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க நடவடிக்கை எடுத்தால், இதற்கான கால எல்லையை இந்தச் சபைக்குச் சமர்ப்பிப்பீர்களா?
04. அரசு, மாகாண சபைத் தேர்தலை எப்போது நடத்த எதிர்பார்க்கின்றது?
05. மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்தும் எல்லை நிர்ணய நடவடிக்கையுடன் சிக்க வைத்துத் தாமதப்படுத்துவது அரசின் நிலைப்பாடா? இல்லையென்றால், பழைய (விகிதாசார) முறையின் கீழ் தேர்தலை நடத்துவது தொடர்பான அரசின் நிலைப்பாட்டை இந்தச் சபைக்குத் தெளிவுபடுத்துவீரா?
06. நீதித்துறைக் கட்டமைப்பின் மீது இழக்கப்பட்ட பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாக தற்போதைய அரசின் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் கொள்கை
இதற்காக வேண்டி, அரச சார்பில் வழக்கு நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வெளியே மாகாண ரீதியாக அரசின் பிரதான வழக்குரைஞர் காரியாலங்களை நிறுவுவோம் என்றும் தற்போதைய அரசின் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதனை எப்போது எப்போது நிறைவேற்றுவீர்கள்? இது தவிர, கூடிய மட்டத்தில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த வழக்கு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட சில நீதிபதிகளினது இடமாற்றம், சேவை இடை நிறுத்தம், பதவி உயர்வு வழங்குவது போன்ற விடயங்கள் தற்சமயம் சமூகப் பேசு பொருளாக காணப்படுகின்றன. இது குறித்த அரசின் மதிப்பீடுகள் யாவை? என வினவியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





டிரைவர் என்றால் கேவலமா.. முத்துவை அசிங்கப்படுத்திய அருணுக்கு மீனா பதிலடி! சிறகடிக்க ஆசையில் இன்று Cineulagam

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
