மாளிகை அரசியல் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்! சஜித் உறுதி
வங்குரோத்தான இந்த நாட்டுக்கு ஜனாதிபதி மற்றும் அலரி மாளிகைகள் என்றுமே தேவையில்லை என்பதே தனது கருத்து என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை ஜயவர்தனபுர உயர் பாதுகாப்பு பகுதிக்கு மாற்ற உள்ளதாக அரசாங்கம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
வங்குரோத்தான இந்த நாட்டுக்கு இந்த மாளிகைகள் என்றுமே தேவையில்லை என்பதே எனது கருத்து. இதற்கு முன்னரும் நான் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறேன்.
அலரி மாளிகை, ஜனாதிபதி மாளிகை இவை அனைத்தையும் எம் நாட்டின் மாணவர் சமுதாயத்திற்கும், இளம் சமுதாயத்தினருக்கும் நவீன முறையில் தகவல் தொழிநுட்பம், ரோபோடிக் , உயிரியல் தொழிநுட்பம் போன்ற துறைகளில் அறிவை வழங்குவதற்கான, வளர்ப்பதற்காகன ஒரு இடமாக மாற்ற வேண்டும்.
நாம் மாற்றுவோம். இந்த நாட்டிற்கு இவ்வாறான மாளிகை அரசியல் தேவையில்லை. ஜனாதிபதியாகட்டும், பிரதமராகட்டும், அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழும் அந்த மாளிகை அரசியல், மாளிகை கலாச்சாரத்தை முற்றாக இல்லாமலாக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.