புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லர்! சஜித் அணி தெரிவிப்பு
புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்லர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
எமது நாட்டைப் பற்றிச் சிந்திக்கின்ற நாட்டுக்கு உதவி செய்ய விரும்புகின்ற புலம்பெயர் தமிழர்கள் அதிகம் உள்ளனர், இவர்களை நாம் நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இனவாதம்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், இவ்வளவு காலமும் இந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் செய்தது இனவாதத்தை கக்கியதுதான். அதைப் பரப்பித்தான் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்.
அதனால்தான் நாட்டுக்கு இந்த நிலைமை. முதலில் இனவாதத்தை இல்லாதொழியுங்கள். அப்போது தான் எல்லோரையும் ஒன்றிணைத்து இந்த நாட்டை அபிவிருத்தி செய்வது பற்றி பேசலாம். வெளிநாட்டில் எமது வளங்கள் அதிகம் இருக்கின்றன.
புலம்பெயர் தமிழர்கள்
புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அல்லர். எமது நாட்டைப் பற்றிச் சிந்திக்கின்ற - நாட்டுக்கு உதவி செய்ய விரும்புகின்ற புலம்பெயர் தமிழர்கள் அதிகம் உள்ளனர்.
இவர்களை நாம் நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்களைக் கூட எமது பக்கம் எடுக்கின்ற திறமை எம்மிடம் இருக்க வேண்டும்.
அவர்கள் எமது நாட்டவர்கள். கடந்த
காலங்களில் தவறுகள் இடம்பெற்றிருக்கலாம். அதைச் சரி செய்து கொண்டு இவர்களை எம்
பக்கம் இழுக்க வேண்டும் என கூறியுள்ளார்.




