உண்டியலை குலுக்கி மக்களிடம் பணத்தை பெற்று கட்சி அலுவலகங்களை ஆடம்பரமாக அமைத்துள்ளனர்-சஜித்
ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சியின் நிதியின் மூலம் மக்களுக்கு மருந்து, பாடசாலைகளுக்கு பேருந்து,கணனி என்பவற்றை வழங்கும் போது கேலி செய்யும் நபர்கள், உண்டியல் குலுக்கி மக்களிடம் இருந்து பணத்தை சேகரித்து தமது கட்சி அலுவலகங்களை ஆடம்பரமாக அமைத்துக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று அவிசாவளையில் தெரிவித்துள்ளார்.
கேலி, கிண்டல் செய்யாது மக்களுக்கு உதவுங்கள்
50 லட்சம் ரூபா பெறுமதியான பேருந்து ஒன்றை அவிசாவளை சீதாவாக்க தேசிய பாடசாலைக்கு நேற்று அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கேலி, கிண்டல்களை செய்யாது தம்மிடம் இருப்பதற்கு ஏற்ப வறிய மக்களுக்கு உதவுங்கள் என்று கேலி, கிண்டல் செய்வோரிடம் கேட்டுக்கொள்கிறேன். மேடைகளில் கூக்குரலிடும் சில நபர்களிடம் வேலைத்திட்டங்கள் இல்லை.
திருடர்களை பிடித்து, ஊழலை தோற்கடித்து நாட்டை முன்னேற்ற வேண்டும் என மிகப் பெரிய தேவை எனக்குள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள், புத்தக பைகளை வழங்குவேன் எனக்கூறிய போது, என்னை கிண்டல் செய்தனர்.
மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை ஆரம்பித்துள்ளோம்
அதன் பிரதிபலன்களை நாட்டு மக்கள் தற்போது அனுபவித்து வருகின்றனர். மக்கள் எதிர்பார்த்த அமைப்பு ரீதியான மாற்றத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளை இலக்கு வைத்து அந்த மாற்றங்களை ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருகிறோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற இடதுசாரி கட்சிகளே உண்டியல் குலுக்கி மக்களிடம் நிதியுதவியை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



