தமிழரசு கட்சியினரை சந்தித்து கலந்துரையாடிய சஜித் பிரேமதாச
வடக்கிற்கு விஜயம் செய்துள்ள எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இலங்கைத் தமிழரசுக் கட்சியினரை (ITAK) சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) விஐயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எங்களுடைய தமிழரசுக் கட்சியினருடன் பேச வேண்டுமென்று கோரியதன் அடிப்படையில் இன்று (11.06.2024) சுமார் இரண்டு மணித்தியாலங்கள் எங்களுடைய இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
கொடுத்ததை மீளப்பெறும் சூழ்ச்சி
இதில் எங்களுடைய கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, சிரேஸ்ர உபதலைவர்
சீ்.வீ.கே.சிவஞானம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம் மற்றும் நானும் கலந்து
கொண்டு தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பு சம்பந்தமாக எடுத்துக் கூறியுள்ளோம்.
அதிகாரப் பகிர்வு தொடர்பான 13 ஆம் திருத்தத்தைக் கூட இப்பொழுது இன்னமும் மோசமான நிலைக்கு கடந்த கால அரசாங்கங்கள் கொண்டு வந்து விட்டிருக்கின்றன.
கொடுத்ததையும் மீளப்பெறும் ஒரு சூழ்ச்சியின் காரணமாக இப்பொழுது அது மிகவும் நலிவடைந்ததாக காணப்படுகிறது. ஆகவே 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது கூட இன்று அர்த்தம் இல்லாமல் இருக்கிறது என்பதை தெளிவாகக் கூறியுள்ளோம்.
இவற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதிலளிக்கும் போது, முதலில் கிராமம் கட்டியெழுப்பபட வேண்டும் என்றும் அதன் பிறகு நகரம் பிரதேச செயலகம், மாவட்டம், மாகாணம் கட்டியெழுப்பப்பட்டு அதற்கு பிறகு தான் நாடு கட்டியெழுப்பபடும் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் வெவ்வேறு இனங்கள் மத்தியில் உள்ள பரஸ்பர நம்பிக்கையீனத்தை சிறிது சிறிதாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதோடு அனைவரும் சேர்ந்து செயற்பட வேண்டும் என்ற கருத்தையும் அவர் கூறியிருந்தார்.
சஜித்தின் தேர்தல் அறிக்கை
இந்த நாடு நோக்கி அவர் சொல்லுகிற கருத்தியல்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் எங்களது தமிழ் மக்களின் அடையாளங்கள் பேணப்பட வேண்டும். தமிழ் மக்களது தாயகத்திலே வடக்கு, கிழக்கு இணைந்ததான ஒரு அலகிலே பூரண அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.
இதை நாம் அவரிடம் தெளிவுப்படுத்தியிருந்தோம். இதுவே, எங்கள் மக்களுடைய எதிர்பார்ப்பு எனவும் கூறியிருந்தோம்.
ஆகவே, அதிகாரப் பகிர்வு சம்பந்தமான அவருடைய நிலைப்பாட்டை எங்களுடைய மக்களுக்கு மட்டுமல்லாமல் பெரும்பான்மை மக்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம்
இதற்கு சஜித் தரப்பிலிருந்து தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அவை அனைத்தும் உள்ளடக்கப்படும் என்று பதிலளிக்கப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |