பங்கேற்பு ஆட்சி தொடர்பில் சஜித் பிரேமதாசவின் வலியுறுத்தல்
பொதுமக்களின் முன்மொழிவுகளை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்து அவர்கள் சார்பாக தலையீடு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி அலுவலகத்தில் இன்று(26) இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுமக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்திற்கு எடுத்து செல்ல உகந்த வழிமுறையாக தேசிய மக்கள் பேரவை ஸ்தாபிக்கப்படுகின்றது. ஒருவர் பொது தேர்தலில் அல்லது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று 5 வருடங்களுக்கு ஒரு முறையே மக்களிடம் செல்கின்றனர்.
பங்கேற்பு ஆட்சி
பங்கேற்பு ஜனநாயகத்தை அமுல்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் இன்மையே மக்களின் துயரங்களுக்கு காரணம். எனவே ஆட்சியாளருக்கும் மக்களுக்கும் இடையில் சீரான கருத்து பரிமாற்றம் இருக்க வேண்டும். அதனூடாக தவறான பாதையில் பயணிக்கும் ஆட்சியாளர் நேரான பாதைக்கு செல்வார்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் காலங்களில் மட்டும் மக்களிடம் செல்வதை விட எல்லா காலங்களிலும் பங்கேற்பு ஆட்சிமுறையை அமுல்படுத்தப்பட வேண்டும்.
இதைத்தான் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கோரி நிற்கின்றனர். 74 ஆண்டுகால ஆட்சியை குற்றம் சாட்டும், 225 பேரும் ஒன்றே என கூறும்.
இந்த தருணத்தில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை அனைத்து கட்சிகளையும், இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பேரவையாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வலியுறுத்தல்
தற்போதுள்ள அரசாங்கத்திற்கும் இது முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இது நாளாந்த வேலைத்திட்டமாக மாற வேண்டும்.
220 இலட்சம் மக்களுக்காக முன்வைக்கப்படும் பிரேரணைகளை எதிர்க்கட்சி என்ற வகையில் யதார்த்தபூர்வமாக அமுல்படுத்தி, நாடாளுமன்ற சபையில் உகந்த குரலாக வெளிப்படுத்தி நிறைவேற்ற எதிர்பார்க்கின்றோம்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் மக்கள் பணத்தினாலயே பராமரிக்கப்படுவதாகவும், அங்கு ஏற்கனவே 2 உகந்த பணிகள் நடைபெற்று வருகின்றது.
எந்தவொரு சபைக்கும் தனிநபரினால் வந்து முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் இன்று தொடக்கம் அனைத்து மக்கள் தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் பேரவையாக மாற்றப்பட்டுள்ளதையடுத்து அதன் ஒருங்கிணைப்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜீபுர்ரஹ்மான் மற்றும் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.