சிங்கப்பூரில் எதற்காக வழக்கு: சஜித் பிரேமதாச கேள்வி
கடல்சார் சேத இழப்பீடுகள் தொடர்பில் இழப்பீட்டுத் தொகை கட்டுப்பாடுகளைக் கொண்ட சிங்கப்பூரில் வழக்குத் தொடர்ந்துள்ள விடயம் குறித்து சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.
கடல்சார் சேத இழப்பீட்டு கோரிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட நாட்டில், கடல்சார் சேதத்திற்கு இழப்பீடு கோரி எக்ஸ்பிரஸ் பேர்ள் தொடர்பான வழக்கு ஏன் தாக்கல் செய்யப்பட்டது என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் ஆட்சேபணை தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் சேதத்திற்கு இழப்பீடு கோரி வழக்கு
கடல்சார் வளங்கள் அழிக்கப்படும் போது இழப்பீடு கோருவதற்கு சர்வதேச மரபுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், எக்ஸ்பிரஸ் பேர்ள் சேதத்திற்கு இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ள சிங்கப்பூர் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான நிலையில், இழப்பீடு வரம்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட்ட நாட்டில் இழப்பீடு கோரி வழக்குத் தொடுப்பது இலங்கைக்கு நன்மை தருமா? பாதகமாக அமையுமா என்பது பாலர் பாடசாலைப் பருவ குழந்தை கூட சொல்லிவிடும் என்றும் சஜித் பிரேமதாச விமர்சனம் தெரிவித்துள்ளார்.



