வெற்றியாளர் யார் என்பதை சிந்தித்துத் தீர்மானியுங்கள்! சஜித் வேண்டுகோள்
ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஜோடிக்குப் புள்ளடி இடுவதா அல்லது இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்வதா என்று மக்களே தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 44 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் குளியாபிட்டி நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இளைஞர் சமூகத்துக்காக தொழில் வாய்ப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இந்த நாடு அதல பாதாளத்தில் வீழ்ந்து, மக்களின் வாழ்க்கை வீழ்ச்சியடைந்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படாத ஒரு யுகத்தில் இருக்கின்றோம்.
குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் மந்த போசனை அதிகரிக்கின்ற இந்த யுகத்தில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, விருத்தியடையச் செய்வதற்கான யுகத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.
இந்த இளைஞர் சமூகத்துக்காக பத்து இலட்சம் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதோடு, வறுமையைப் போக்குகின்ற நோக்கில் மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபா விதம் 24 மாதங்களுக்கான நிவாரணத்தை வழங்குவோம்." என அவர் தெரிவித்துள்ளார்.