போர் முடிவடைந்தும் வடக்கில் அபிவிருத்தி இல்லை! சஜித் கவலை
போர் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வடக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் பொருளாதார, சமூக மற்றும் வாழ்வாதார பரப்புகளில் சாதகமான முன்னேற்றத்தை அடையவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 233ஆவது கட்டமாக ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை, யாழ்ப்பாணம் (Jaffna) மானிப்பாய் புனித. ஹென்றியரசர் கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (11.06.2024) இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“வடக்கு மாகாணத்தில் மக்களை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தியொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கருதுகின்றது. இது மக்களை முன்னிலைப்படுத்திய பங்கேற்பு அபிவிருத்தியின் ஒரு வடிவமாக அமைந்து காணப்படும்.
அறிவு சார்ந்த பொருளாதாரம்
இதன் மூலம் கிராமத்தைக் கட்டியெழுப்பி, நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்குப் பக்க பலம் கிடைக்கும்.
இதற்கு, அறிவு சார்ந்த பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். இதனால், தகவல் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்த தேசிய வேலைத்திட்டமொன்றின் தேவைப்பாடு நாட்டில் இன்று எழுந்துள்ளது.
யாழ். மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில் பூங்காக்களை அமைத்து, அபிவிருத்தியை நடைமுறை ரீதியாக முன்னெடுப்போம். இதுவே ஐக்கிய மக்கள் சக்தியின் கனவாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |