ரணிலும் சஜித்தும் இணைந்தால் நல்லது: மனோ கணேசன் கருத்து
ரணிலும், சஜித்தும் இணைந்தால் நல்லது என மக்கள் விரும்புவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் முற்போக்குக் கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கரங்கோர்த்து இருப்பதற்கான காரணங்களையும் பகிரங்கமாக மனோ கணேசன் வெளிப்படுத்தியுள்ளார்.
இன்றைய (19.07.2023) நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உரை தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,
பங்காளிக் கட்சியாக இருக்க பிரதான காரணம்
நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை வரை நாடெங்கும் பரந்து வாழும் பெருந்தோட்ட மக்களுக்கு வீடு கட்டி வாழவும், பயிர்ச் செய்கை வாழ்வாதாரத்துக்கும் காணி வழங்கி அவர்களைச் சிறுதோட்ட உரிமையாளராக்கும் எமது கொள்கையைச் சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதேபோல், கொழும்பு மாநகரில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வாழும் மக்களுக்குத் தொடர்மனைகளை கட்டி சொந்த வீடுகள் வழங்கவும் சஜித் எம்முடன் ஒரு கட்சியாக, தேசிய கூட்டணியாக உடன்பாடு கண்டுள்ளார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி, சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணியில், பிரதான பங்காளிக் கட்சியாக அங்கம் வகிக்கப் பிரதான காரணங்களில் இது ஒன்றாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இவை தொடர்பில் எமக்கு எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் உறுதிகள் அளித்துள்ளார். பகிரங்கமாக மேடைகளில் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் அதை இன்று மீண்டும் கூறி உறுதி செய்தார்.
வாழ்வாதார உரிமை
மத்திய, மேல், சப்ரகமுவா, ஊவா, தென், வயம்ப ஆகிய 6 மாகாணங்களின், பதுளை, மொனராகலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு (அவிசாவளை), களுத்துறை, குருநாகலை, காலி, மாத்தறை ஆகிய 12 மாவட்டங்களில் அமைந்துள்ள 102 பிரதேச செயலக பிரிவுகளில் பெருந்தோட்டத் துறை அமைந்துள்ளது.
எங்கெல்லாம் எம்மவர் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் காணி உரிமையும் வீட்டு உரிமையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதேபோல், தொழில், பொருளாதாரம், வாழ்வாதாரம் ஆகிய காரணங்களை தேடி பெருந்தொகையான நமது மக்கள் மலைநாட்டு பிரதேசங்களில் இருந்தும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இருந்தும் தேசிய தலைநகரம் கொழும்பு மாநகரில் வந்தும் குடியேறுகின்றார்கள்.
இங்கேயே பிறந்து வளர்ந்து வாழும் மக்களும் இருக்கின்றார்கள். அனைவருக்கும் கல்வி, வீடு, வாழ்வாதார உரிமைகளை உறுதி செய்து, பாதுகாப்பு அளிக்க நான் இங்கே இருக்கின்றேன்.
ரணிலும் சஜித்தும் இணைந்தால் நல்லது
ரணிலும், சஜித்தும் இணைந்தால் நல்லது என மக்கள் விரும்புகின்றார்கள். நாமும் விரும்புகின்றோம். ஆனால், அது எமது கைகளில் மாத்திரம் இல்லை. பல புற சக்திகள் அதற்குத் தடையாக இருக்கின்றன.
அதை அவர்களே முடிவு செய்ய வேண்டும். எமது பிரதான நோக்கு, எமது மக்களின் விடிவுக்கு நிரந்தர தீர்வுகளான காணி உரிமையும் வீட்டு உரிமையும் கல்வி உரிமையும் உறுதிப்படுத்தப்படுவதாகும். கல்வி உரிமைக்கு இந்திய அரசு உதவும் என நான் நம்புகின்றேன்.
காணி உரிமையை, நாம் இலங்கையில் பெறுவோம். இவற்றை எப்படி பெறுவது என்பதில் தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்க்க தரிசனத்துடன் நடக்கின்றது. நாம் நினைத்தால், உடன் அரசில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறலாம்.
ஆனால் அதைவிட இதுவே எமது நிதானமான தீர்க்கதரிசன நோக்கு என்பதை நான் பொறுப்புடன் கட்சித் தலைவராக கூறி வைக்க விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |