ரஞ்சன் நாடாளுமன்றத்தில் இல்லாமல் இருப்பது பெரும் குறை - எதிர்க்கட்சித் தலைவர்
ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்தில் இல்லாமல் இருப்பது பெரிய குறை எனவும், ஊழல், மோசடி, இலஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுத்த அவர் மிக விரைவில் விடுதலையாக வேண்டும் என்பது தனது பிரார்த்தனை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அங்குணுகொலபொலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நலன் அறிய இன்று அங்கு சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நிதி, இலஞ்சம், பொது சொத்துக்களை கொள்ளையிட்டமை என்று எந்த குற்றச்சாட்டும் கிடையாது. அவர் தன்னிடம் இருந்தவற்றை பொது மக்களுக்கு அன்பளிப்பு செய்த மனிதாபிமானி.
மக்களுக்காக சேவை செய்யும் தளராத தேவை ரஞ்சன் ராமநாயக்கவுக்குள் இருந்தது. பல அனர்த்த சந்தர்ப்பங்களில் அவர் இரண்டு முறை சிந்திக்காது மக்களுக்காக முன்நோக்கி வந்தவர்.
ரஞ்சன் ராமநாயக்க உயர்கல்வியை கற்று பட்டப்படிப்பை மேற்கொள்ள வேண்டும் என் நோக்கத்துடன் செயற்பட்டு வருகிறார்.
அவருக்கு அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பது மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய ஒன்று.
அனுதாபம், மனிதாபிமான மற்றும் சுகாதார விடயங்களை அடிப்படையாக கொண்டு ரஞ்சன் ராமநாயக்கவுக்காக தலையிடுமாறு நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக நான் பல முறை ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இந்த கோரிக்கைக்கு அமைய அவரை விடுதலை செய்ய ஜனாதிபதி துரிதமான தீர்மானத்தை எடுப்பார் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.