கல்விச் சீர்திருத்த ஒத்திவைப்புக்கு அரசே பொறுப்பு: சஜித் சாடல்
கல்விச் சீர்திருத்தங்கள் ஒத்திவைக்கப்பட்டமைக்கு நாமே காரணம் எனக் கூறுவது பொருத்தமற்றது என்றும் கல்வி சீர்திருத்தங்களை அநுரகுமார திஸாநாயக்கவே ஒத்திவைத்தார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கல்வித் துறை நிபுணர்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய தரப்பினர்களுடன் நேற்று(24.01.2026) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கல்விச் சீர்திருத்தங்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முறையாக இதனை முன்னெடுக்க வேண்டுமானால் Green Paper, White Paper களை முன்வைத்து இந்த நடவடிக்கைகளை முன்தொடருமாறு ஐக்கிய மக்கள் சக்தியே கோரியது.
கல்விச் சீர்திருத்தங்களை முதலில் நாமே முன்வைத்தோம். அந்தவகையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை மீளப்பெறுமாறோ அல்லது நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றோ நாம் கூறவில்லை.

கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் தடையாகவுள்ளதாகக் கூறப்படுவது நம்பக் கூடிய விடயமல்ல. நாட்டில் கல்விச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சியாக இருந்தாலும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நவீன ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
மேலும், ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குவதில் காணப்படும் பிரச்சினைகள், தொழில்நுட்பப் பிரச்சினைகள் போன்றவற்றைத் தவிர்த்து, 2027ஆம் ஆண்டுக்குள் இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியே முடிவை எடுத்தாரே தவிர, எதிர்க்கட்சி இந்த விடயங்களில் ஈடுபடவில்லை.
கல்விச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தோம். எதிர்க்கட்சியால் கல்விச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்துவதை நிறுத்த முடியுமா? அதிபர்கள், ஆசிரியர்கள் அல்லது மாணவர்களை வீதிக்கு இறக்கி, இவற்றை எதிர்க்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. நாம் அவ்வாறு ஒருபோதும் செய்யவும் இல்லை.
ஜனாதிபதியே ஒத்திவைத்தார்..
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவரது முகநூல் பதிவில் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருக்கின்றார். அதில் தரம் 6-இற்கான சீர்திருத்தங்கள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அவரே தெரிவித்துள்ளார்.

எனவே, சீர்திருத்தங்களை ஒத்திவைத்தது நாம் அல்ல, ஜனாதிபதியே என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். அவை காலம் தாழ்த்தப்பட்டுள்ளமைக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆரம்பத்திலிருந்தே இதனை முறையாக முன்னெடுத்திருந்தால் இன்று இந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டி ஏற்பட்டிருக்காது.
அதே சமயம், தரம் 6 ஆங்கில பாட விடயதான தயாரிப்புப் பணிகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்களோ எனது அதிகாரிகள் குழுவோ பங்கேற்கவில்லை. Buddy net தொடர்பில் புதிதாக ஒன்றையும் கூறவேண்டியதில்லை. இந்த வலைத்தளத்துடன் பாட அலகுகளை உருவாக்கும் செயற்பாட்டில் எதிர்க்கட்சி ஈடுபடவில்லை.
இது தயாரிக்கப்படும் போது 12 சந்தர்ப்பங்களில் மீளாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அவ்வாறு இருந்தும்,பொறுத்தமற்ற ஒரு இணையதளத்தின் முகவரி எவ்வாறு பாட நூலில் உள்ளடக்கப்பட்டது? இதற்கும் எதிர்க்கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனும் போது எவ்வாறு சீர்திருத்தங்கள் எம்மால் தடைப்பட்டுள்ளதாகக் கூற முடியும்?

எனவே, இதனை பெற்றோர் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தவறைத் தான் நாம் சுட்டிக்காட்டினோம். அதனைவிடுத்து சீர்திருத்தங்களை நிறுத்துமாறு நாம் கோரவில்லை.
எதிர்க்கட்சி காரணம் அல்ல
ஜனாதிபதி இது தொடர்பில் ஆராய்ந்த சமயத்தில் இன்னும் பல குறைபாடுகள் இதில் காணப்பட்டதனால், இந்தச் சீர்திருத்த நடவடிக்கைகளை ஒருவருடத்துக்குக் காலம் தாழ்த்துவதாக அறிவித்து விட்டு, எதிர்க்கட்சிதான் இதற்குக் காரணம் என்ற வகையில் சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினார்கள்.
எதிர்க்கட்சி தான் இந்தச் சீர்திருத்தங்களை நிறுத்தியது என்று அரசு கூறினால், அது ஜனாதிபதி மற்றும் பெரும்பான்மையைக் கொண்ட அரசை விட எதிர்க்கட்சிக்கு அதிக அதிகாரம் இருப்பதைக் காட்டுகின்றது.
தேர்தல் மேடைகளில் நாம் ஆங்கில மொழிக் கல்வி மற்றும் தகவல் தொழிநுட்பக் கல்வி தொடர்பில் பிரஸ்தாபித்த போது, மக்கள் எம்மை நம்பாமல் தற்போதைய அரசுக்கு வாக்களித்தனர். ICT பாட அலகை நாம் 6 ஆம் தரத்தில் இருந்தே இங்கு ஆரம்பிக்கின்றோம்.

உலக நாடுகளில் 1 to 12 வரை ICT கற்பிக்கப்பட்டு வருகின்றது. நமது நாட்டில் 6 ஆம் தரம் முதலே ICT கற்பிக்கப்படுகின்றது. இது தவறான நடவடிக்கையாகும்.
தகவல் தொழில்நுட்பப் பாடங்களைக் கற்பிக்கப் போதுமான வளங்களும் வசதிகளும் கிராமப் புற பாடசாலைகளில் இல்லை. இங்கு வளப் பற்றாக்குறை ஏற்பட்டு, கல்வியில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு காணப்படுகின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விருந்தில் ஏற்பட்ட சண்டை.. வெளிவந்த உண்மையால் கோபத்தில் பாண்டியன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri