நாடாளுமன்றில் இன்று ஒலித்த கூட்டுக் குரல் - பாதுகாப்பு அமைச்சரின் திட்டவட்டமான கருத்து
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தோட்ட அதிகாரியா, தொழிலாளியா என்பது முக்கியமல்ல. சட்டமென்பது அனைவருக்கும் சமம் என அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இன்று திட்டவட்டமாக அறிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. ஆரம்ப கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.
மஸ்கெலியா, மொக்கா தோட்டத்தில் தோட்ட தொழிலாளி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் கருத்து வெளியிட முற்பட்டார்.
எனினும், இது ஒழுங்குப் பிரச்சினை அல்ல என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்லுமாறு சபாநாயகர், சபை முதல்வரிடம் கூறினார்.
பிமல் ரத்நாயக்க
இதன்போது எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, "இது அவசர பிரச்சினையென்றால் நிலையியற் கட்டளைச் சட்டம் 27,2 இன்கீழ் அது தொடர்பில் கேள்வி எழுப்பி இருக்கலாம். தோட்டத் தொழிலாளர்கள் மட்டும் அல்ல நாம் அனைவருக்கும் பொறுப்புக்கூறும் அரசு." - என்று சுட்டிக்காட்டினார்.

"தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டாம் எனக் கூறியவர்கள் இவர்கள். இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் சஜித் தரப்பினர் சென்று முறையிட்டனர். மனோ கணேசன், நீங்கள் அவர்களுடன் அல்ல, எங்களுடனேயே இருக்க வேண்டும்." - என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இதனையடுத்து மீண்டும் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார் சஜித் பிரேமதாஸ. "மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வுக்கு எதிராக நான் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு சென்றதாக சபை முதல்வர் கூறுகின்றார். இது அப்பட்டமான பொய்யாகும். இந்தக் கூற்றை அவர் வாபஸ் பெற வேண்டும்." - என்றார்.
இதற்குப் பதிலளித்த சபை முதல்வர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க, "சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், அவர்களின் எம்.பிக்கள் சென்று முறையிட்டனர். எனவே, இதற்காக முதலில் நீங்கள் (சஜித்) மன்னிப்புக் கோரவும்." என்றார்.
ஜீவன் தொண்டமான்
இதன்போது கருத்து வெளியிட்ட இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், "மஸ்கெலியா மொக்கா மிட்லோதியன் தோட்டத்தில் கடந்த 5ஆம் திகதி சிவக்குமார் என்ற தொழிலாளர் தாக்கப்பட்டுள்ளார்.

டெல்மார் நடுப்பிரிவு தோட்டத்தில் நேற்று சிறீதரன் என்ற தொழிலாளரும் தோட்ட முகாமையாளரால் தாக்கப்பட்டுள்ளார்." - என்று சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் ஆனந்த விஜேபால "மேற்படி விடயம் தொடர்பில் ஆராய்ந்து 30 நிமிடங்களுக்குள் விளக்கம் அளிக்கப்படும்." - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.
இதன்போது எழுந்த மனோ கணேசன் எம்.பி., மொக்கா மற்றும் டெல்மா தோட்டங்களில் தொழிலாளர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைச் சுட்டிக்காட்டினார். "தோட்ட முகாமையாளர் மற்றும் தோட்ட அதிகாரி ஆகியோரே தாக்குதல் நடத்தியுள்ளனர். தோட்ட நிறுவனங்கள் மற்றும் பொலிஸ்மா அதிபரை அழையுங்கள். இது பற்றி கலந்துரையாட வேண்டும்." - என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தான் வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் மேற்படி சம்பவங்கள் தொடர்பில் சபையில் விளக்கமளித்தார்.

இதன்போது அவர் கூறியவை வருமாறு:- "நீலகாமம் தோட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் 11 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
அடுத்த கட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறும். பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மொக்கா தோட்டத்தில் நேற்றிரவு தோட்ட முகாமையாளரால், சிவகுமார் என்பவர் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார். நேற்றிரவு உடபுஸல்லாவை, டெல்மா பகுதியில் தோட்டத் தொழிலாளி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். தாக்கப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார். தாக்குதல்களை நாம் அனுமதிக்கவில்லை. சட்டம் அனைவருக்கும் சமம்." - என்றார்.
வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ வீடியோ Cineulagam