ராஜித - ரணிலுடன் இணைவதை தடுப்பதற்கு சஜித் கடும் பிரயத்தனம்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவி பெற்றுக்கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில், அவரை கட்சிக்குள் தக்கவைத்துக்கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜித சேனாரத்ன அரசாங்கத்துடன் இணைய உள்ளதாக கடந்த வாரங்களில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. அவை உறுதிப்படுத்திய செய்திகளாக இருக்கவில்லை.
ஜனாதிபதி ரணிலை பாராட்டியுள்ள ராஜித
பெரும்பாலும் அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த செய்திகளில் கூறப்பட்டிருந்தன. அரசாங்கத்தில் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் சத்துர சேனாரத்ன ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டிருந்தமை இப்படியான செய்திகள் வெளியாக காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் அவரது வேலைத்திட்டங்களையும் பாராட்டி கடந்த வாரம் கருத்து வெளியிட்டிருந்தார். ரணில் விக்ரமசிங்க பெரிய சேவையை செய்து வருவதாக ராஜித தெரிவித்திருந்தார்.
தன்னையும் அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக எந்த நேரத்திலும் தான் அமைச்சு பதவியை பொறுப்பேற்க முடியும் எனவும் அவர் கூறியிருந்தார்.
ராஜித சேனாரத்ன இவ்விதமாக கருத்து வெளியிட்டிருந்த நிலையில், அவருக்கு அமைச்சு பதவியை வழங்கி அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பில் அரசாங்கத்திற்கு இரண்டு விதமான நிலைப்பாடுகள் காணப்படுவதாக பேசப்படுகிறது.
ராஜிதவை இணைத்து்ககொண்டால் அரசாங்கத்திற்கு பாதிப்பு
ராஜிதவை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வதால், அரசாங்கத்திற்கு ஏதேனும் நன்மை ஏற்படுமா என பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்துடன் அவரை அரசாங்கத்தில் இணைத்துக்கொண்டால், அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்தி புனிதமாகி புதிய தோற்றத்தை பெறும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ராஜிதவை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளும் போது தனியாக இணைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் 6 முதல் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைத்துக்கொண்டால், அது அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளனர்.
அரசாங்கத்தில் உள்ள பலர் ஜனாதிபதியிடம் இவ்வாறு கூறியுள்ள நிலையில், ராஜித அல்ல எதிர்க்கட்சியில் இருக்கும் எவராக இருந்தாலும் அரசாங்கத்தில் இணைத்து அவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு மேலும் சிலர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.
ராஜித சேனாரத்ன மீது எப்படியான குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவரையாவது அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வது அரசாங்கத்திற்கு தற்போது சாதகமாக அமையும் என்பது இவர்களில் நிலைப்பாடாக இருப்பதாக கூறப்படுகிறது.
ராஜிதவை கட்சிக்குள் தக்கவைக்க முயற்சிக்கும் சஜித்- செல்லவிடுமாறும் கூறும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ராஜித தொடர்பில் அரசாங்கத்திற்குள் இவ்வாறு பேசப்படும் நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இது சம்பந்தமாக சிறிய பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் ராஜித சேனாரத்னவை தொடர்ந்தும் கட்சிக்குள் தக்கவைக்க சஜித் பிரேமதாச முயற்சித்து வருகிறார்.
இந்த நிலையில், அண்மையில் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராஜித அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை பெற்றுக்கொள்வார் எனில் அவரை செல்லவிடுமாறும் அவரை தொடர்ந்தும் கட்சியில் வைத்திருக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.