பொழுதுபோக்காக தபால் நிலையங்களை விற்கும் ரணில்: நுவரெலியாவில் சஜித் உரை
தபால் நிலையங்களை விற்பனை செய்வது தற்போதைய ஜனாதிபதியின் பொழுதுபோக்காக இருக்கின்றது. நுவரெலியா தபால் நிலையத்தையும் விற்பனை செய்ய முயற்சிக்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, நுவரெலியா (Nuwara Eliya) - தலவாக்கலையில் இன்று (08) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
"21ஆம் திகதி வெற்றியோடு நான் நுவரெலியாவுக்கு வருவது தபால் நிலையத்தை விற்பனை செய்ய அல்ல. லயன் அறைகளில் அடைக்கப்பட்டு இருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களையும், தொழில் வாய்ப்பில்லாமல் இருக்கின்ற இளைஞர்களையும் சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கே நான் வருவேன்.
லயன் அறைகள்
அத்தோடு இந்த ஜனாதிபதியே அவரின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். அநுரகுமாரவின் பிரத்தியேகச் செயலாளராவதற்கு அவர் விருப்பப்படுகின்றார்.
தற்பொழுது ஜனாதிபதியும் அநுரகுமாரவும் ஒன்றாக இணைந்து என்னை தோல்வியடைய செய்வதற்காக பணத்தை செலவிடுகின்றார்கள். யார் எதைச் செய்தாலும் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
200 வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றை கொண்ட இந்த தோட்டத் தொழிலாளர்கள் வியர்வை சிந்தி, கண்ணீர் வடித்து, இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு வழங்குகின்ற ஒத்துழைப்பை மறக்க முடியாது.
இந்த பக்கபலம் குறித்து நாம் பெருமைப்பட்டு அவர்களுக்கு நன்றி கூறி கௌரவ படுத்துகின்றோம். அத்தோடு இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அவர்களை சமமான முறையில் ஏற்றுக் கொள்கின்றோம்.
தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் ரீதியான, தகுதியான பிரதிநிதித்துவத்தை வழங்குவதோடு, காணிக்கான, வீட்டுக்கான உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு உறுதி பூண்டு, லயன் அறைகளுக்கு பதிலாக தனியான குடியிருப்பு கிராமங்களை அமைத்துக் கொடுப்பதற்கான அடித்தளத்தை இடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |