அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு - சஜித் கடும் குற்றச்சாட்டு
தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினர் கலந்துகொண்ட சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய கலந்துரையாடலை அடுத்து, அரசு இந்த இரு தரப்பினரையும் கண்டி 'சஹஸ் உயன' பகுதிக்கு அழைத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என பகிரங்கமாகக் கூறியது.
அரசின் வாக்குறுதி
இருப்பினும், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்பார்க்கும் சேவைப் பிரமாணக் குறிப்புகளை நடைமுறைப்படுத்த அரசு தவறிவிட்டது.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பெயரை 'சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்' எனப் பெயர் மாற்றுவதை மட்டுமே அரசு செய்துள்ளது. மார்ச் மாதத்தில் தனிச் சட்டம் ஒன்று கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், அது இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.
தேர்தல் சமயங்களில் இவர்களை நெறிப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரிய ஆரச்சியும் இந்த இரு தரப்பினரையும் ஏமாற்றியுள்ளார்.
அரசு இவர்களை மறந்துவிட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி இவர்களை எப்போதுமே மறக்காது. நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் இவர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்" என்றார்.