இந்த அரசை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தி சஜித் கூட்டணியே! பொல்துவ பேரணி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று மரிக்கார் முழக்கம்
தேசிய மக்கள் சக்தி அரசை வீழ்த்தி நாட்டுக்குச் சரியான மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் கூட்டணியுமே என்பது கொழும்பு - பொல்துவ சந்தியில் நடைபெற்ற மக்கள் பேரணி மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமைச் செயலகத்தில் நேற்று (24.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசுக்கு எதிரான போராட்டத்தின் ஆரம்பம் மட்டுமே
அவர் மேலும் கூறுகையில், கொழும்பு - பொல்துவ சந்தியில் இடம்பெற்ற பிரம்மாண்டமான எதிர்ப்புக் போராட்டமானது அரசுக்கு எதிரான போராட்டத்தின் ஆரம்பம் மட்டுமே. எதிர்வரும் நாள்களில் அரசுக்கு எதிரான அழுத்தங்கள் மேலும் தீவிரமடையும்.
கடும் மழை மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியிலும், தமது அன்றாட வேலைகளையும் குடும்ப நேரத்தையும் தியாகம் செய்து ஆயிரக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிராகத் திரண்டு வந்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அரசு வாக்குறுதியளித்தபடி மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கத் தவறியமை, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் ஜனநாயக மீறல்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட ரீதியில் நீதிமன்ற வழக்குகளிலிருந்து தப்புவதற்காகத் நாங்கள் போராடவில்லை.
கொழும்பு மாவட்டத்தில் எவ்வித ஆதரவுமின்றி தனித்து விடப்பட்ட பெண்மணியின் நிலைமை போன்று, தற்போது அரசுக்கு எதிராகச் செயற்படும் சில குழுக்கள் மக்கள் மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
பகிரங்கச் சவால்
தேர்தல்களில் நேரடிப் போட்டியை எதிர்கொள்ளப் பயந்து தேசியப்பட்டியல் ஊடாகப் நாடாளுமன்றத்துக்கு வர முயல்பவர்கள் மற்றும் சதித்திட்டங்களில் ஈடுபடுபவர்களுக்குத் தைரியமிருந்தால் கொழும்பு மாவட்டத்தில் எனக்கு எதிராகப் போட்டியிட்டு வென்று காட்டுமாறு பகிரங்கச் சவால் விடுக்கின்றேன்.

சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்கள் மூலம் செய்யப்படும் பொய்யான பிரசாரங்களுக்குப் பதிலளித்து நேரத்தை வீணடிக்கப் போவதில்லை, எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வாராந்தம் சுமார் 1,000 கிலோமீற்றர்கள் வரை பயணித்து மக்களை நேரில் சந்தித்து வருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் கொள்கை ரீதியான புரிந்துணர்வு ஏற்கனவே உருவாகியுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அந்தப் பலம் வெளிப்படும். ஜே.வி.பி. அரசை வீழ்த்துவதற்காக ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மனப்பூர்வமாக அழைப்பு விடுக்கின்றேன். பழமையான அரசியல் கலாசாரத்தையோ பழைய முகங்களையோ கொண்டு இந்த அரசை வீழ்த்த முடியாது. தெளிவான கொள்கை, கோட்பாடு மற்றும் புதிய அரசியல் கலாசாரத்தின் ஊடாக மட்டுமே உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam