மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிக்க அநுர அரசு முயற்சி - சஜித் குற்றச்சாட்டு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தொலைநோக்குப் பார்வை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ், பொலனறுவை மாவட்டம், அரலகங்வில பிரதேச வைத்தியசாலைக்கு 28 இலட்சம் ரூபா மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "இந்த அரசுக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தொலைநோக்குப் பார்வையும், திட்ட வரைபடமும் காணப்படுவதாகத் தெரியவில்லை.
இதைவிடுத்து அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிப்பதற்கு முயற்சித்து வருகின்றது. ஜனநாயகத்துக்கான வெளியை சுருக்குவது அரசின் பணியல்ல. பாதிக்கப்பட்ட தாய்நாட்டுக்கு நிவாரணங்களைப் பெற்றுத் தரும், மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்தக்கூடிய புதிய பயணத்தை ஆரம்பிப்பது தேவையாகக் காணப்பட்டாலும், அரசின் இதுவரையான நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அதனைக் காண முடியாதுள்ளது.
நாட்டின் பொருளாதாரம்
டித்வா சூறாவளிக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு பங்களித்த விவசாயம், சேவைகள் துறை மற்றும் தொழில் துறைகள் சூறாவளிக்குப் பிறகு பல்வேறு கடுமையான அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளன.

இந்தத் துறைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் தரப்பினருக்கு சேவைகளைப் பலப்படுத்தி, அவர்களைப் வலுப்படுத்துவது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். இந்தத் துறைகளில் உள்ளவர்களுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் நிவாரணம் வழங்க அரசால் முடியாவிட்டால், அது முழுப் பொருளாதார செயல்முறையையும் பாதிக்கும்.
அதன் பாதகமான விளைவுகளை நாடு சந்திக்க நேரிடும். உணவுப் பாதுகாப்புக்கு, பொருளாதார வளர்ச்சிக்கு, ஏற்றுமதித் துறைக்கு, உற்பத்தித்துறைக்கு, சுற்றுலா உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்க பலத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். நிவாரணங்களையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இல்லையெனில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தத் தரப்பினர் பெற்றுத் தரும் பங்களிப்பு குறைந்து விடும். அரச அதிகாரிகளுக்கு அடிபணியாமல் தகுதியானவர்களுக்கு நிவாரணம் வழங்குவதே அரசின் பொறுப்பாகும். இது தேசிய நிகழ்ச்சி நிரலின் முதன்மை அம்சமாக அமைந்து காணப்பட வேண்டும்.
வீடுகள், சொத்துக்கள் மற்றும் வணிகங்கள் சேதமடைந்தவர்களுக்கு வாக்குறுதியளித்த நிவாரணத்தை வழங்குவதைத் தவிர்ப்பதற்கான காரணங்களை அரசு தற்போது தேடி வருகின்றது.
மக்களை ஏமாற்றாது, வாக்குறுதியளித்த நிவாரணங்களை அதே முறையில் வழங்க வேண்டும். இந்த அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 200 மில்லியன் டொலர் அவசரக் கடனைப் பெற்றிருந்தாலும், இந்தக் கடனுக்கான விதிமுறைகளையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தக் கடினமான நேரத்திலும் அரசால் சலுகைக் கடனைப் பெற முடியாமல் போயுள்ளது. இந்த வழியில் சென்று ஒரு நாட்டால் முன்னேற முடியாது. தலைதூக்க முடியாது." - என்றார்.
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri