எந்தவொரு தரப்புக்கும் அபரிமிதமான அதிகாரம் வழங்கப்படக் கூடாது..! சஜித் வலியுறுத்தல்
எந்தவொரு தரப்புக்கும் அபரிமிதமான அதிகாரத்தை பொதுமக்கள் வழங்கக் கூடாது என்றும், கடந்த கால நிகழ்வுகளிலிருந்து நாட்டு மக்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் கோழைத்தனமான அநுரவின் வெறியாட்டத்தை தோற்கடிப்போம் என்ற கருப்பொருளில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நடவடிக்கைக் குழு நியமனம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளால் தற்போதைய அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும இதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை அவர்கள் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகின்றது. நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஆட்சிக்கு வந்த மிகக் குறுகிய காலத்திற்குள் தற்போதைய அரசாங்கம் சுமார் 23 இலட்சம் வாக்குகளை இழந்துள்ளது.
தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் மேலும் பல இலட்சம் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தினால், மக்கள் மத்தியில் செல்ல அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றது.

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியால் 'தேசிய நடவடிக்கைக் குழு' ஒன்று ஸ்தாபிக்கப்படும்.
இதில் பதவிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், மக்களின் துயரங்களைத் தீர்க்கப் போராடும் அனைவரும் உள்வாங்கப்படுவார்கள்.
மாகாண சபை தேர்தல்
மாகாண சபைகள் மூலம் சர்வதேச முதலீடுகளைக் கூட ஈர்த்து சிறந்த சேவையாற்ற முடியும். நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து, அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய 13 ஆவது திருத்தச் சட்டம் அவசியமானது. சர்வதேசத்திற்குச் சென்றால் '13 பிளஸ்' என்றும், உள்நாட்டில் சில பகுதிகளில் '13 மைனஸ்' என்றும் இரட்டை வேடம் போடும் அரசியல் எமக்குக் கிடையாது.
13 ஆவது திருத்தச் சட்டத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது மக்களின் துயரங்களை விற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், இன்று அவற்றை மறந்து சுகபோகங்களை அனுபவித்து வருகின்றது.

உலக சந்தையில் நிலவரங்கள் சாதகமாக இருந்தும், மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்கவோ அல்லது எரிபொருளுக்கான வரிகளை நீக்கி மக்களுக்கு நிவாரணம் வழங்கவோ இந்த அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டு மக்கள் கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
எந்தவொரு தரப்பிற்கும் நாடாளுமன்றத்தில் அல்லது ஆட்சியில் அபரிமிதமான (மூன்றில் இரண்டு) அதிகாரத்தை வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கினால் அதிகார மமதையால் நாட்டை சீரழிக்கும் தவறான அரச ஆளுகை முறையே உருவாகும்.
ஒரே மாற்றாகக் காணப்படும் ஐக்கிய மக்கள் சக்திக்குக் கூட சாதாரண பெரும்பான்மையே போதுமானது. அறுதிப் பெரும்பான்மையோ அல்லது அபரிமிதமான அதிகாரமோ எமக்கும் தேவையில்லை என்றார்.