சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
சர்வாதிகார நோக்கங்களுக்காக ஜனநாயக போராளிகளைத் தண்டிப்பதை உடனடியாக நிறுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின்(ஜேவிபி) முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்யாரத்ன மற்றும் அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் நாமல் கருணாரத்ன உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்ய முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த சர்வாதிகார, பாசிச வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியாகக் கடுமையான எதிர்ப்பையும் வெறுப்பையும் நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.
இந்த அரசாங்கத்தின் தொடக்கத்திலிருந்தே, மக்கள் நலனுக்காக உழைப்பதற்குப் பதிலாக, அவர்களின் தனிப்பட்ட அதிகார வெறியுடன் செயல்பட்டு, மக்களின் வாழ்க்கையை துன்புறுத்துவதையே செய்து வருகிறது.
அதேபோல் ஜனநாயகத்தின் போர்க்களத்தில் போராடும் போராளிகளைத் தண்டிப்பதுமே அரசாங்கத்தின் வேலையாக இருந்து வருகிறது. நாள்தோறும் மக்களுக்கு ஏமாற்றங்களைத் தரும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ஏற்கனவே அணிதிரண்டு வருகின்றனர்.
அதைத் தாங்க முடியாத அரசாங்கம் இப்போது அதன் கொள்கையாக அடக்குமுறை, அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவதன் மூலம் செய்து வருகிறது.
இந்த நாட்டில் ஜனநாயக அரசியலில் ஈடுபட ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உரிமை உண்டு, அதை மீறும் எத்தகைய உரிமையும் அரசாங்கத்திற்கு இல்லை. அரசாங்கத்தின் இயலாமை, தோல்வி மற்றும் உணர்வற்ற தன்மையை மறைக்க ஜனநாயக அரசியல் அரங்கில் உள்ள ஆர்வலர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் குடிமக்களை தண்டிக்க எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
கருத்துச் சுதந்திரம், ஜனநாயகப் போராட்டம், அரசாங்கத்தை விமர்சித்தல் போன்றவற்றுக்கான உரிமைகள் இந்த நாட்டின் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்படுவதை இந்த அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் சகோதர அரசியல் கட்சிகளுக்கு உள்ள, அரசியலின் ஜனநாயக உரிமைகளை மீறுவதற்கு எதிராகச் சாத்தியமான மற்றும் செயல்பட முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் என சஜித் பிரேமதாச தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.