சட்ட நிறுவனங்கள் மீது அரசு கடும் அழுத்தம்! மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு
நாட்டின் வரலாற்றில் என்றுமில்லாத வகையில், தற்போதைய அரசு பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களை அரசியல் தேவைகளுக்காகத் தவறாகப் பயன்படுத்துகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று (17.04.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் நடவடிக்கை
அவர் மேலும் கூறுகையில், ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படைத் தூண்களான பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சிறைச்சாலைத்துறை போன்றவை இன்று அரசால் மிக மோசமான முறையில் கையாளப்படுகின்றன.
தனிமனித சுதந்திரமும், பிரஜைகளின் உரிமைகளும் இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று ஆளுங்கட்சியின் அரசியல் மேடைகளில் இருந்த ஒரு ஓய்வுபெற்ற அதிகாரியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பொலிஸ்மா அதிபரும் அரசின் விருப்பத்துக்கு இணங்கவே செயற்படுகிறார்.
நேர்மையாகச் செயற்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய சட்டவிரோதமான முறையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனித உரிமை வழக்கின் மூலம், அரசின் நடவடிக்கை தன்னிச்சையானது என்பது உறுதியாகியுள்ளது.

பிள்ளையான் கைது விவகாரம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைது செய்யப்பட்ட விவகாரமானது ஒரு தெளிவான அரசியல் பழிவாங்கலாகும். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கர்தினாலைத் திருப்திப்படுத்துவதற்காகவே பிள்ளையான் கைது செய்யப்பட்டார் என அரசு கூறினாலும், நீதிமன்ற அறிக்கைகளின்படி அவருக்கும் அந்தத் தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது அம்பலமாகியுள்ளது.
19 வருடங்களுக்கு முந்தைய சம்பவத்தைக் காரணம் காட்டி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். அரசின் இத்தகைய ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை நாட்டு மக்கள் கட்சி பேதங்களைக் கடந்து உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் என்றார்.