அமைச்சர்கள் சிலரின் செயலை கடுமையாக சாடிய ஆளும் கட்சி உறுப்பினர்!
அமைச்சரவைக் கூட்டங்களில் முடக்கலை விதிக்க வேண்டாம் என்று ஏகமனதாக ஒப்புக்கொண்ட பின்னர், முடக்கல் வேண்டும் என்று கடிதங்கள் எழுதுவது ஒரு கீழ்த்தரமான செயல் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம், இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
கடந்த திங்கட்கிழமை, அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டை மூட வேண்டாம் என்று அனைத்து அமைச்சர்களும் முடிவு செய்த பின்னர், அந்த முடிவுக்கு ஆதரவாக கைகளை உயர்த்திய சில அமைச்சர்கள் உடனடியாக முடக்கலைக் கோரி அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினர். இது தாழ்வான செயல் என காரியவசம் குறிப்பிட்டார்.
அமைச்சரவைக் கூட்டங்களில் சிலர் முதுகெலும்பில்லாமல் பேசுவதும், கடிதங்களை எழுதுவதும், அவை ஜனாதிபதியை அடையும் முன் ஊடகங்களுக்கு வெளியிடுவதையும் கண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஏமாற்றமடைந்துள்ளது என்று காரியவசம் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டை முடக்க வேண்டும் என ஆளும் கட்சியின் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில், வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் கூட்டாக கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அண்மையில் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.