சர்ச்சையை ஏற்படுத்திய பௌத்த துறவிகளின் ஆடை விவகாரம்.. அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பௌத்த துறவிகள் தொடர்பிலான சிறைச்சாலை ஒழுங்குவாதங்களை புதுப்பிக்கும் செயல்முறையின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் நிலையான உத்தரவுகளை புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, தனது ஆய்வை முடித்து இரு வாரங்களுக்குள் திருத்தங்களுக்கான யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளதுடன், பௌத்த துறவிகள் தொடர்பான இந்த யோசனைகள் எதிர்வரும் வாரத்தின் நடுப்பகுதியில் மகா சங்கத்தினரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
சீருடை விவகாரம்
மேலும், இந்த ஒழுங்குவிதிகள் அடுத்த இரு வாரங்களுக்குள் ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதன் பின்னர் தொடர்புடைய பிரிவு அல்லது பக்கத்தின் பரிந்துரைக்கு அமைவாக, சிறையிலடைக்கப்பட்ட துறவிகளை அவர்களது சீருடையுடன் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலகொடஅத்தே ஞானசார தேரர் தொடர்பான சம்பவம் மற்றும் சிறையிலடைக்கப்பட்ட துறவிகளை சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும்போது தற்போதைய நடைமுறைகள் குறித்து மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தையடுத்து, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மூன்று நிகாயாக்களையும் சேர்ந்த மகா சங்கத்தினருக்கும் இடையில் சிறப்பு கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
தற்போதைய சிறைச்சாலை அமைப்பை நிர்வகிக்கும் 1877ஆம் ஆண்டின் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் மற்றும் அதன் ஒழுங்குவிதிகளில் பௌத்த துறவிகளுக்கு என பிரத்யேக சரத்துக்கள் எதுவும் இல்லை என்றும், அதிகாரிகள் நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்தார்.
சட்டம் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப திருத்தப்பட வேண்டுமேயன்றி, சட்டத்தை மீறி குறிப்பிட்ட நபர்களுக்காக உத்தரவுகளை பிறப்பிக்க தாம் தயார் இல்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.