அனர்த்த நிலமைகளின் போது பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற சுகாதாரத்துறையினருக்கு பயிற்சி
அனர்த்த நிலமைகளின் போது, சுகாதார நிறுவனங்களினதும், நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளர்களினதும் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு, கல்முனை பிராந்தியத்தில் உள்ள சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களுக்கு அனர்த்த பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பிராந்திய பொதுச் சுகாதார பிரிவினால் அனர்த்த பாதுகாப்பு சம்மந்தமான பயிற்சி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உயிர் மற்றும் உடமைகளைப் பாதுகாப்பது தொடர்பான பயிற்சி
அந்த வகையில் தீ விபத்து மற்றும் அது தொடர்பான அனர்த்த நிலைமைகளின் போது உயிர் மற்றும் உடமைகளைப் பாதுகாப்பது சம்பந்தமான பயிற்சி செயலமர்வொன்று நேற்று (02) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
சம்மாந்துறை, காரைதீவு, நாவிதன்வெளி, இறக்காமம் போன்ற பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் குறித்த பயிற்சி செயலமர்வில் கலந்துகொண்டனர்.
உயிர் உடமை பாதுகாப்பு
இதன்போது வைத்தியசாலை உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களில் தீ விபத்து அனர்த்தங்கள் இடம்பெறுகின்ற போது அதனைக் கட்டுப்படுத்துவது உயிர் உடமைகளை பாதுகாப்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் செய்முறை பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
பிராந்திய தர முகாமைத்துவ மற்றும் சுற்றுச்சூழல் தொழில்சார் உணவுப் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத், கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு உத்தியோகத்தர் ஏ.ஆர்.கே.மிஹார் ஆகியோர் இந்நிகழ்வில் வளவாளர்களாக கலந்துகொண்டு விளக்கமளித்ததுடன் செய்முறை பயிற்சிகளையும் வழங்கினர்.




