தேர்தல் களநிலைமைகளை இராஜதந்திரத்துடன் கையாள வேண்டும்: சபா குகதாஸ் தெரிவிப்பு
தேர்தல் பகிஸ்கரிப்பு என்பது மிக முட்டாள் தனமான முடிவு. ஜனநாயக பலத்தைப் பேரம் பேசுவதற்கு ஒவ்வொரு தேர்தல்களையும் காலத்திற்கு ஏற்ற களநிலைமைகளை அடிப்படையாக கொண்டு கையாளுவதே இராஜதந்திரம் என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்றையதினம் (13.09.2024) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் அந்த அறிக்கையில்,
"செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ப் பொது வேட்பாளரின் சின்னமான சங்குக்கு நேரே புள்ளடி இடலும் தமிழ் மக்களின் ஒற்றுமை நிலைப்பாட்டை காண்பிப்பதுடன் தென்னிலங்கையின் பிரதான சிங்கள வேட்பாளர்கள் 50 வீத வாக்குகளை பெற்றுக் கொள்ள விடாது தடுப்பதற்கும் அனைவரையும் வாக்குச் சாவடிகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தேர்தல் பகிஸ்கரிப்பு
இம்முறை தென்னிலங்கை தேர்தல் களம் கடந்த காலங்களை விட முற்றாக மாறுபட்டதாக முன்முனைப் போட்டி கொண்டதாக மாறியுள்ளது.
இதனால், பிரதான போட்டியாளர் 50 வீத வாக்குகளைப் பெற திணறடிக்கும் சூழலில் தேர்தல் புறக்கணிப்பு அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடும். இதனை தடுக்க வடக்கு - கிழக்கு மக்கள் வாக்களிப்பில் ஈடுபட வேண்டும்.
அத்துடன், சங்கு சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்க வேண்டும். இதுவே தமிழினத்திற்கான பேரப்பலத்தை உருவாக்கும். மாறாக பகிஸ்கரிப்பில் ஈடுபட்டால் தமிழர்களுக்கு எதிரான சிங்கள தலைவர் அதிகாரக் கதிரையில் அமர்வதற்கும் தமிழரின் ஜனநாயகப் பலம் பலவீனப்படுத்துவதற்கும் தமிழர்களாகிய நாமே வழிவிட்டதாக அமைந்துவிடும். எனவே பகிஸ்கரிப்பை தவிர்ப்போம். வாக்களிப்பில் சங்கு சின்னத்திற்கு வாக்களிப்போம்" என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |