இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் மிகவும் ஆபத்தான தசாப்தத்தை எதிர்கொள்கிறது! புடின் எச்சரிக்கை
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் "அநேகமாக மிகவும் ஆபத்தான" தசாப்தத்தை எதிர்கொள்கிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் மாஸ்கோவில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ் உரையில் விளாடிமிர் புடின் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியுள்ளார்.
மிகவும் ஆபத்தான நிலை
உலகின் தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையை "புரட்சிகரமானது" என்று அவர் விவரித்துள்ளார்,
"எதிர்கால உலக ஒழுங்கு நம் கண்களுக்கு முன்பாக உருவாகிறது" என்றும் ரஷ்ய தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ரஷ்யாவை "அழிக்க" முயற்சிப்பதாகவும் இதன்போது மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
உக்கிரமடையும் போர் பதற்றம்
உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி முதல் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப் படைகளுக்கு, ஜெலன்ஸ்கியின் இராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதனால், ரஷ்யா தன்னிடம் இருக்கும் சக்தி வாய்ந்த படைகளையும், ஆயுதங்களையும் போர்க் களத்திற்கு அனுப்பி, தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதனிடையே, தங்கள் மீது அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த ரஷ்யா தயாராகி வருவதாக, உக்ரைன் அதிபர் கூறிய நிலையில், தங்கள் மீது நாசக்கார ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த உக்ரைன் ஆயத்தமாகி வருவதாக ரஷ்யாவும் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள உக்ரையின் பகுதியான கிரிமியாவில் ரஷ்யா கட்டிய பாலத்தில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்த நிலையில், அது உக்ரைன் தான் நடத்தியது என்று ரஷ்யா ஆதாரமற்ற புகாரை முன்வைத்தது.
அணு ஆயுதம் மூலம் தாக்குதல்
அதனைத் தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ்வில் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. மேலும் மின் உற்பத்தி நிலையங்களின் மேலும் தாக்குதல் நடத்தியது. அதனால் உக்ரைனில் பல இடங்களில் மின் விநியோகத்தை நிறுத்தும் அபாயம் ஏற்பட்டது.
இந்த நடவடிக்கைகளின் காரணத்தினால் இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. தற்போது உக்ரைனின் தாக்குதலை எதிர்கொள்ள அணு ஆயுத போர் ஒத்திகையை ரஷ்யா நடத்திவருகிறது.
அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் தக்க பதிலடி தரும் வகையில் ரஷ்யச் சிறப்புப் படைகள் நவீன ஏவுகணைகளைச் செலுத்தி ஈடுபட்ட ஒத்திகையை, அதிபர் புடின் காணொலி மூலம் பார்வையிட்டார்.
உலக நாடுகள் எச்சரிக்கை
இதனால், உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதங்கள் மூலம் தாக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா உக்ரைன் மீதான போரில் அணு ஆயுதங்களை உபயோகிக்க வாய்ப்புள்ளதாகக் கூறியிருந்தார்.
இது உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால், இரு நாடுகளும் போரைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இச் சூழ்நிலையிலே இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் "அநேகமாக மிகவும் ஆபத்தான" தசாப்தத்தை எதிர்கொள்கிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.