ரஷ்யாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் தொடர்பில் வெளியான தகவல்
அமெரிக்காவின் 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையின் ஊடகவியலாளர் இவான் கெர்ஷ்கோவிச் மீது, ரஷ்யா குறித்து ரகசிய தகவல்களை உளவு பார்த்ததாக ரஷ்ய புலனாய்வாளர்கள் முறைப்படி குற்றச்சாட்டியுள்ளனர் என்று ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
கெர்ஷ்கோவிச் முறைப்படி குற்றம் சாட்டப்பட்டது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஊடகவியலாளருக்கு தூதரக அணுகல் வழங்கப்படவில்லை
மேலும் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளருக்கு தூதரக அணுகல் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவான் கார்ஸ்கோவிச் என்ற பத்திரிகையாளர் யூரல் மலைப்பகுதியின் யெகாடரின்பர்க் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டதாக எஃப்எஸ்பி (The Federal Securiy Service) எனப்படும் ரஷ்ய உளவுப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வழக்கைப் பற்றி அமெரிக்கா கூறியுள்ளதாவது, கெர்ஷ்கோவிச் ரஷ்யாவில் தவறாகக் காவலில் வைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் தயாராகி வருகிறது.
உளவு பார்த்த குற்றம்
பனிப்போருக்குப் பிறகு மாஸ்கோவால் உளவு பார்த்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட முதல் அமெரிக்கப் பத்திரிகையாளர் கெர்ஷ்கோவிச் ஆவார்.
இந்தக் குற்றம் உறுதி செய்யப்பட்டால் இவான் கெர்ஸ்கோவிச் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்கக்கூடும்.
உக்ரைன் போரால் ரஷ்யா -- அமெரிக்கா இடையே பனிப்போர் நிலவும் சூழலில், ஊடகவியலாளரின் கைது இரு நாட்டு அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
36 ஆண்டுகளுக்குப் பின் உளவு பார்த்த குற்றத்துக்காக அமெரிக்க ஊடகவியலாளர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.