உக்ரைனுடனான போரை நிறுத்த முடியாது: புடின் திட்டவட்டம்
உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சியைச் செயல்படுத்துவது கடினம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொண்ட ரஷ்யா, முக்கிய பகுதிகளைக் கைப்பற்றியது.
மேலும், உக்ரைன் தரப்பு பதில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகிறது.
அத்துடன் ரஷ்யாவைக் குறிவைத்தும் தாக்க ஆரம்பித்துள்ளது.
இந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்து உக்ரைனில் அமைதி திரும்ப ஆபிரிக்க நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
அமைதி பேச்சுவார்த்தை முயற்சி
இந்த அமைதி பேச்சுவார்த்தை திட்டம் குறித்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆபிரிக்க தலைவர்கள், ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஷ்யா ஜனாதிபதி புடின், ஆபிரிக்க முன்முயற்சி உக்ரைனில் அமைதிக்கு ஒரு அடிப்படையாக இருக்கலாம், ஆனால் உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அந்த அமைதி பேச்சுவார்த்தை முயற்சியைச் செயல்படுத்துவது கடினம்.
இந்த அமைதி பேச்சுவார்த்தை முயற்சியின் விதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் அதில் செயல்படுத்தக் கடினமாக அல்லது சாத்தியமற்ற விஷயங்களும் உள்ளன.
பேச்சுவார்த்தையை நிராகரிக்கவில்லை
இந்த முன்முயற்சிகளில் ஒன்று போர் நிறுத்தம். ஆனால் உக்ரைன் தரப்பு பெரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கையைச் செயல்படுத்துகிறது.
தாக்குதலுக்கு உள்ளாகும்போது எங்களால் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது.
அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பிப்பது தொடர்பில் கேள்விக்குப் பதிலளித்த புடின், "நாங்கள் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரிக்கவில்லை.
ஆனால் இந்த செயல்முறை ஆரம்பிப்பதற்கு, இரு தரப்பிலும் உடன்பாடு இருக்க வேண்டும்.
அதேசமயம் போர் நிறுத்தம் என்ற யோசனையை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் நிராகரித்துள்ளார்.
தனது நாட்டின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்திருக்கவும், 17 மாதங்கள் நீடித்த போருக்குப் பிறகு அதன் படைகளை மீண்டும் ஒருங்கிணைக்கவும் போர் நிறுத்தம் வாய்ப்பாக அமைந்துவிடும் எனவும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |