உக்ரைன் போர்க்களத்துக்கு மத்தியில் ராஜதந்திர நெருக்கடி! 45ரஷ்யர்களை வெளியேற்றும் போலந்து! (காணொளி)
போலந்துக்கு எதிராக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் 45 ரஷ்ய ராஜதந்திரிகளை நாட்டில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக போலந்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
45 ரஷ்யர்கள் உளவாளிகள் அல்லது உளவாளிகளின் கூட்டாளிகள் என்று சந்தேகிக்கப்படுகிறார்கள் என்று போலந்து சிறப்பு சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ஸ்டானிஸ்லாவ் ஜரின் தெரிவித்துள்ளார்.
இதில் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் போலந்திற்கான ரஷ்ய தூதர் செர்ஜி எண்ட்ரேவ்,இன்று போலந்து வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டபோது குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
இதேவேளை அணுமின் நிலையங்கள் மீதான ரஷ்ய தாக்குதல்களால் தனது நாடு எதிர்கொள்ளும் ஆபத்துக்களைப் பற்றி உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
ஜப்பானிய நாடாளுமன்றத்தில் தனது நேரடி காணொளி உரையின்போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
இதற்கிடையில் ரஷ்ய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச பொருளாதாரத் தடைகளை அவர் கோரியுள்ளார்.