லைமன் நகருக்குள் புகுந்த உக்ரைன் துருப்புகள் - பின்வாங்கியது ரஷ்ய படைகள்
உக்ரேனிய நகரமான லைமனில் இருந்து ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெற்றுள்ளது.
குறித்த நகரத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் சுற்றி வளைக்கப்படுவார்கள் என்ற அச்சத்தின் மத்தியில் இந்த பின்வாங்கல் நடந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், லைமன் நகரை மீண்டும் கைப்பற்றுவது உக்ரைனுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகரம் ரஷ்யாவால் ஒரு தளவாட மையமாக பயன்படுத்தப்பட்டதுடன், உக்ரேனிய துருப்புக்கள் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களில் அதிக பகுதிகளுக்கு அணுகலை வழங்க முடியும்.
லைமனுக்குள் நுழைந்த உக்ரைன் துருப்புகள்
இது குறித்து இணையத்தில் பகிரப்பட்ட காணொளி காட்சிகளில் உக்ரேனிய வீரர்கள் நகரின் புறநகரில் தங்கள் தேசியக் கொடியை அசைப்பதைக் காட்டுகின்றது. லைமன் டொனெட்ஸ்கில் அமைந்துள்ள நகர் என்பதுடன், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு உக்ரேனிய பிராந்தியங்களில் ஒன்றாககும்.
அத்துடன், குறித்த பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதாக நேற்றைய தினம் புடின் அறிவித்திருந்தார். எனினும், இதனை மேற்குலக நாடுகள் சட்டவிரோத நடவடிக்கை என தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உக்ரேனியப் படைகள் கிழக்கு நகரமான லைமனுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இன்று காலை உக்ரைன் படையினரால் லைமன் நகர் சுற்றி வளைக்கப்படுவதற்கு முன்பு சுமார் 5,000 ரஷ்ய துருப்புக்கள் அங்கு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.