ஜனாதிபதி கோட்டபாயவை ஆச்சரியமடைய வைத்த ரஷ்ய கோடீஸ்வரர்
உலகின் தலைசிறந்த கோடிஸ்வரர்கள் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய கோடீஸ்வரர் ஒருவர் தனது குடும்பத்திற்காக முழு ரயிலையும் பதிவு செய்துக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் இலங்கைக்கு வந்த ரஷ்ய நாட்டவர் ரயில் ஒன்றை முழுமையாக முன்பதிவு செய்து குடும்பத்துடன் மலையகத்திற்கு பயணித்துள்ளார்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த செய்தியை கேட்டு ஆச்சரியமடைந்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள பணக்காரர்கள் இலங்கைக்கு வருகை தருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கோவிட் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் ரஷ்யாவின் பெரும் பணக்காரர் ஒருவர் நாட்டுக்கு வந்துள்ளார். அவர் தனது குடும்பத்தினர் சிலருடன் ரயிலில் மலையகத்திற்கு பயணம் செல்ல விரும்பினார்.
சமூகத்தினருடன் ஒன்றுபடுவது மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொதுப் போக்குவரத்துச் சேவையினால் அந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் தனது குடும்பத்திற்காக முழு ரயிலையும் முன்பதிவு செய்துவிட்டு ஹட்டன் மற்றும் எல்ல பகுதிக்கு பயணித்தார்.
கோவிட் பரிசோதனைக்காக தனக்கான தனியாக மருத்துவரையும் ரஷ்யாவில் இருந்து அழைத்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, அவரது பிள்ளைகள் பியானோ வாசிப்பதால் அதனையும் கொண்டு வந்துள்ளார்
அத்தகைய பணக்காரர்களும் இந்த நாட்டைப் பார்க்க வருகிறார்கள் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இவ்வாறு கூறியதும் ஜனாதிபதியும் ஆச்சரியமடைந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.