புடினின் இல்லத்தை இலக்கு வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லங்களில் ஒன்றை இலக்காக கொண்டு உக்ரைன் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை உக்ரைன் உடனடியாக முழுமையாக மறுத்துள்ளது.
நோவ்கரோட் பகுதியில் நிகழ்ந்ததாக கூறப்படும் இந்த ட்ரோன் தாக்குதல் காரணமாக, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவின் நிலைப்பாடு மாற்றப்படும் என லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் குற்றச்சாட்டு
எனினும், இந்த சம்பவத்தில் எந்த சேதமும் அல்லது உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், ஆனால் “பழிவாங்கும் தாக்குதல்களுக்கு” இலக்குகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ரஷ்ய வான்படை பாதுகாப்பு அமைப்புகள் மொத்தம் 91 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக லாவ்ரோவ் தெரிவித்தார்.

தாக்குதல் நடந்த நேரத்தில் புடின் நோவ்கரோட்டில் இருந்தார் என அவர் கூறவில்லை.
மேலும், உக்ரைன் போருக்கு முடிவுகாணும் பேச்சுவார்த்தைகளில் இருந்து ரஷ்யா விலகாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதேவேளை, இந்த ட்ரோன் தாக்குதல் குறித்த ரஷ்யாவின் குற்றச்சாட்டு “முழுமையான கற்பனை” என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள்
இந்த குற்றச்சாட்டு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஃப்ளோரிடாவில் அவர் மூன்று மணி நேரம் சந்தித்ததற்கு அடுத்த நாளே வெளியாகியுள்ளதை செலென்ஸ்கி சுட்டிக்காட்டினார்.
அந்த சந்திப்பில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை என்றாலும், புதிய அமைதி திட்டத்தின் படி அமெரிக்கா உக்ரைனுக்கு 15 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக செலென்ஸ்கி முன்னதாக தெரிவித்திருந்தார்.

“ஜனாதிபதி ட்ரம்பின் குழுவுடன் இணைந்து எங்களால் அடையப்பட்ட ராஜதந்திர முன்னேற்றங்களை பாதிக்க ரஷ்யா மீண்டும் ஆபத்தான கூற்றுகளை பயன்படுத்துகிறது. அமைதியை இன்னும் அருகில் கொண்டு வர நாங்கள் தொடர்ந்து ஒன்றாக பணியாற்றுவோம்,” என செலென்ஸ்கி X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
இதேவேளை, திங்கட்கிழமை ட்ரம்ப் மற்றும் புடின் இடையே நடந்த தொலைபேசி உரையாடலில், இந்த ட்ரோன் தாக்குதல் குறித்து புடின், ட்ரம்புக்கு தகவல் அளித்ததாக ரஷ்ய அரசு வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக அமைதி பேச்சுவார்த்தைகள் குறித்த ரஷ்யாவின் நிலைப்பாடு மறுபரிசீலனை செய்யப்படுவதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.