ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி மரணம்: வெளியான காரணம்.. குற்றம்சாட்டும் ஐரோப்பிய நாடுகள்
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, தென் அமெரிக்காவின் 'டார்ட்' (Dart Frog) தவளைகளிலிருந்து பெறப்பட்ட ஒரு வீரியமிக்க விஷத்தை பயன்படுத்தி கொல்லப்பட்டதாக பிரித்தானியா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் தெரிவித்துள்ளன.
2024ஆம் ஆண்டு சைபீரிய சிறையில் நவால்னி மர்மமான முறையில் உயிரிழந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது உடலில் கண்டறியப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில் 'எபிபாட்டிடின்' (Epibatidine) என்ற விஷம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய பிரித்தானிய வெளியுறவுச் செயலர் யவெட் கூப்பர், "ரஷ்ய அரசாங்கத்திற்கு மட்டுமே நவால்னியைக் கொல்லும் நோக்கம் மற்றும் வாய்ப்பு இருந்தது; நவால்னியை ஒரு அச்சுறுத்தலாகக் கருதிய ரஷ்யா, இத்தகைய கீழ்த்தரமான ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளது" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
அறிவியல் பூர்வம்
இந்த விவகாரத்தில் பிரித்தானியாவுடன் இணைந்து பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

அதில், இந்த நச்சு இயற்கையாகவே ரஷ்யாவில் காணப்படுவதில்லை என்றும், ஒரு வகை தவளைகளில் இருந்தே இவை பெறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளன.
எனவே, நவால்னியின் உடலில் இந்த நச்சு இருந்ததற்கு விளக்கம் எதுவும் இருக்க முடியாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நவால்னியின் மனைவி யூலியா நவால்னயா, "தனது கணவர் கொல்லப்பட்டது இப்போது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யா இந்தத் தாக்குதலின் மூலம் வேதி ஆயுதங்கள் ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகக் கூறி, அந்த நாட்டை வேதி ஆயுதத் தடுப்பு அமைப்பிடம் (OPCW) முறைப்பாடு அளிக்கப்போவதாகவும் ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளன.