உக்ரைனின் திடீர் தாக்குதல்: பதிலடி கொடுத்த ரஷ்ய இராணுவம்
ரஷ்ய தலைநகா் மொஸ்கோவில் உக்ரைன் இராணுவம் நடத்திய ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதலை ரஷ்ய இராணுவம் முறியடித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"மொஸ்கோவை நோக்கி நேற்றைய தினம்(04.06.2023) உக்ரைனின் 5 ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டன. அவற்றில் 4 விமானங்களை ரஷ்யாவின் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன.
ஆளில்லா விமானத் தாக்குதல்
5-ஆவது ஆளில்லா விமானம், மின்னணு தளவாடம் மூலம் செயலிழக்கச் செய்யப்பட்டு வீழ்த்தப்பட்டது." என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனால் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொஸ்கோவின் நுகோவோ விமான நிலையத்துக்கு வந்த விமானங்களை அங்குள்ள அதிகாரிகள் வேறு விமான நிலையங்களுக்கு செல்ல உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில் ரஷ்ய தலைநகா் மொஸ்கோ மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மொஸ்கோ நகரில் முன்னரும் இதுபோன்ற தாக்குதல்கள் பல முறை நடத்தப்பட்டிருந்தாலும், ரஷ்யாவின் வாடகை இராணுவப் படையான வாக்னா் குழு அந்த நாட்டின் இராணுவ உயரதிகாரிகளுக்கு எதிராக மொஸ்கோவை நோக்கி படை திரட்டிய நிலையில், பின்னா் கிளா்ச்சியைக் கைவிட்டுத் திரும்பியதற்குப் பிறகு நடத்தப்பட்டுள்ள முதல் தாக்குதல் இதுவாகும்.
ரஷ்யாவுக்குள் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசுவதைத் தவிா்த்து வரும் உக்ரைன் அதிகாரிகள், இந்த தாக்குதல் குறித்தும் தகவல் எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |