நாட்டில் அதிகரிக்கும் டொலர் தட்டுப்பாடு: மற்றுமொரு விலையேற்றத்திற்கு வாய்ப்பு
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சீனி, பருப்பு, பால்மா உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் சுமார் நூறு சதவீதத்தால் அதிகரித்துள்ளன. அதே போன்று, இனி வரும் காலங்களில் டொலர் பெறுமதி அதிகரிப்பால் இந்த பெறுமதி கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று(06.06.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தால் டொலர் பெறுமதி உயர்வை தடுத்து நிறுத்த முடிய வில்லை. அது மாத்திரமின்றி எமது நாட்டின் பிரதான ஏற்றுமதித் துறையான ஆடைத் தொழில்துறைக்கு அமெரிக்கா சில மாதங்களுக்கு முன்னர் 20 சதவீத வரியை விதித்திருந்தது, கடந்த வாரம் மேலும் 12.5 வீத வரியை விதித்துள்ளது.

இதைப் பற்றி அரசாங்கத்தில் யார் பேசுகிறார்கள்? ஆடைத் துறை மட்டுமன்றி, இறப்பர் பாலில் இருந்து தயாரிக்கப்படும் இறப்பர் தயாரிப்புகளையும் அமெரிக்காவே அதிகம் கொள்வனவு செய்கிறது.
இதனால் நாட்டின் இறப்பர் விலைக்கும் ஆடைத் தொழில்துறைக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அரசாங்கம் இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
டொலர் பெறுமதியைக் குறைக்க வேண்டுமாயின் எமது ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். ஆனால் தற்போது எமது ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் அரசாங்கமோ தேசிய உற்பத்தி வருமானம் அதிகரித்துள்ளதாகக் கூறிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு வருமானம் அதிகரித்திருந்தால் மக்களுக்கு எரிபொருள் மானியத்தையாவது வழங்கியிருக்க வேண்டுமல்லவா? என கேள்வியெழுப்பியுள்ளார்.