எம்மை தொடர்புப்படுத்தியும் வதந்திகள்-திலினி பிரியமாலியின் நிறுவனத்தின் ஊடக நிபுணர்கள்
நிதி மோசடி குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தலைவராக பதவி வகிக்கும் நிறுவனத்தின் ஊடக விளம்பரப்படுத்தல் பிரிவில் பணியாற்றும் ஊடகவியலாளர் சுரங்கி கொடித்துவக்கு மற்றும் தனஞ்ஜய நாணயக்கார ஆகியோர் இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன் போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்கள், நிறுவனம் தொடர்ந்தும் வழமைப் போல் இயங்கி வருவதாகவும் தாம் தொடர்ந்தும் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளனர்.
திலினி பிரியமாலி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார்
இதனிடையே திலினி பிரியமாலி எதிர்வரும் நாட்களில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக சுரங்கி கொடித்துவக்கு கூறியுள்ளார்.
அத்துடன் தமக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வரும் நபர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நான் இந்த நிறுவனத்தின் விசேட ஊடக நிபுணராக பணியாற்றி வருகிறேன்.அதேபோல் பிரபல ஊடகவியலாளர் கலாநிதி தனஞ்ஜய நாணயக்கார கடமையாற்றி வருகிறார். எம்மை தொடர்புப்படுத்தியும் சமூக ஊடகங்களில் பல நபர்கள் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
நாங்கள் எங்களது தொழிலையே செய்து வருகின்றோம்
நாங்கள் 20 வருடங்களாக ஊடகத்துறையில் இருக்கின்றோம். மிகவும் சிரமப்பட்டு நாங்கள் எங்கள் ஊடகத்துறை தொழிலை வளர்த்துக்கொண்டவர்கள். எமக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க நாங்கள் எமது தொழிலை மிகவும் கௌரவமாக செய்து வருகின்றோம்.நாங்கள் தொடர்ந்தும் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றோம் சுரங்கி கொடித்துவக்கு வெளியேறியுள்ளார்.
தனஞ்ஜய நாணயக்கார தொழிலை இழந்துள்ளார் என்று பல்வேறு கதைகளை பரப்பி வருகின்றனர். எமது பணிக்கும் ஏற்பட்டுள்ள சம்பவத்திற்கு தொடர்பில்லை. நாங்கள் எமது பணிகளை தொடர்ந்தும் செய்து வருகின்றோம் என சுரங்கி கொடித்துவக்கு கூறியுள்ளார்



