ஆளும்கட்சி எம்.பிகளின் வீடுகளை தீயிட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 11 பேர் கைது
அம்பாறையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் நகரசபை முதல்வர் உட்பட அவர்களது உறவினர்களது வீடுகளைத் தீயிட்ட மற்றும் சேதமாக்கிய சம்பவம் தொடர்பாக மேலும் நாள்வரை கைது செய்ததுடன், இதுவரை 11 பேரைக் கைது செய்துள்ளதாக அம்பாறை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட இந்த மே 9 திகதி வன்முறைச் சம்பவத்தையடுத்து அம்பாறையிலுள்ள ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான வீரசிங்க, விமல திஸாநாயக்கா மற்றும் அவரது மகனின் வீடு , அம்பாறை நகரசபை முதல்வர் ஆகியோரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுச் சேதமாக்கப்பட்டன.
இதனையடுத்து இச்சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கடந்த திங்கட்கிழமை 7 பேரைக் கைது செய்து அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டதையடுத்து 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் நால்வரை இன்று கைது செய்ததையடுத்து இதுவரை 11 கைது செய்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
