கிழக்கு மக்களின் காணிகளை தாரைவார்த்த ஆளும் தரப்புக்கள்
கிழக்கு மாகாணத்தின் முக்கியதொரு இடமாக திருகோணமலை மாவட்ட சம்பூர் பிரதேசம் காணப்படுகிறது.
குறித்த பகுதியில் கடந்த கால அரசாங்கம் மூலமாக அனல் மின்சார நிலைய உற்பத்தியை ஆரம்பிக்க இருந்த போதிலும் மக்களின் பலமான எதிர்ப்பினால் அதனை கைவிட்டார்கள்.
தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊடாக சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை தயாரிப்பதற்கான சூரிய மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு மெய்நிகர் வழியாக ஆரம்பித்து வைத்தார்.
நீண்டகால மின் உற்பத்தி திட்டமம்
திருகோணமலையில் வலுசக்தி மையத்தை மேம்படுத்தும் நோக்கில் இத் திட்டத்தை ஆரம்பித்தாலும் மக்களின் விவசாய காணிகள் இதன் மூலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
"இலங்கை இந்தியா இடையிலான நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு " எனும் கருப்பொருளின் கீழ் மொத்தமாக வலுசக்தி, டிஜிடல் மயமாக்கல், பாதுகாப்பு ,சுகாதாரம் உள்ளிட்ட ஏழு ஒப்பந்தங்கள் இதன்போது பாரதப் பிரதமருக்கும் ஜனாதிபதி அநுர குமார ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டன.
இது குறித்து அப்பகுதி விவசாயியான யோகராசா வயது (67) தெரிவிக்கையில் " வருடா வருடம் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றோம் அதற்குள் சூரிய மின் உற்பத்தி என்ற போர்வையில் எங்கள் விவசாய காணிகளை கையகப்படுத்தியுள்ளார்கள்.
இந்த திட்டத்தை நடை முறைப்படுத்துங்கள். ஆனால் எங்கள் நிலத்தை எங்களுக்கு தாருங்கள். விவசாய பூமியை நம்பியும் அங்குள்ள குளங்களை நம்பியுமே வாழ்கின்ற போது காணிகளை அடாத்தாக கையகப்படுத்துவதை ஏற்க முடியாது.
புதிய அரசாங்கம் எங்கள் காணிகளை விடுவித்து விவசாயத்தை மேற்கொள்ள அனுமதி தாருங்கள்" என்றார்.
குறித்த பகுதியில் இந்த திட்டத்தை மேற்கொள்வதற்காக கிழக்கு மாகாண ஆளுனர் ஜயந்தலால் ரட்ணசேகர அங்கு சென்று பார்வையிட்டு சென்றார்.
இது இவ்வாறு இருக்க இதனை தடுக்கோரியும் தங்கள் காணிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரி ஆளுனர் செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பிலும் அண்மையில் ஈடுபட்டனர்.
குறித்த திட்டத்தை இந்தியாவின் என்டீபீசீ(NTPC) லிமிடெட் மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான திருகோணமலை மின்சார நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படவுள்ள சம்பூர் சூரிய மின் நிலையம், நீண்டகால மின் உற்பத்தி திட்டமாகும்.
தேசிய மக்கள் சக்தியின் ஆளுந்தரப்பை சேர்ந்தவர்கள்
இவ் விரிவாக்கத் திட்டத்தின் (LTGEP) கீழ் நிறுவப்படவுள்ள வடகிழக்கு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வலயத்தின் ஒரு பகுதியாக இது காணப்படுகிறது.
சம்பூர் சூரிய மின் நிலையத் திட்டம் இரண்டு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்டம் 2027 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 500 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 50 மெகாவாட் மின்சாரம் நாட்டின் தேசிய மின்சார விநியோகத்தில் இணைக்கப்படும்.
N-type TOPCon solar cells என்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவப்படும் இந்த திட்டம், வலுசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் என்றும், நாட்டின் வலுசக்தி அமைப்பை புதைபடிவ எரிபொருட்களை நம்புவதற்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை நோக்கி மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, சம்பூர் சூரிய மின்நிலையத் திட்டம் ஆண்டுதோறும் வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்படும் காபனீரொக்சைட் அளவை சுமார் 02 மில்லியன் டொன்கள் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம், பசுமையான எதிர்காலத்தை நோக்கிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கிறது. இவ்வாறான நிலையில் இது குறித்து அப்பகுதி விவசாயி "விவசாயமே எங்கள் தொழிலாகும் இதற்கு பதிலாக மாற்று காணிகளை தரவும் நாங்கள் இங்கு பல வருடங்களாக குளத்தை நம்பி விவசாய செய்கையில் ஈடுபடுகின்றோம்.
இந்த திட்டம் மூலமாக சொந்தமான காணிகளை இழக்க நேரிடுகின்றது இதனால் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிட்டுள்ளதுடன் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
கடந்த காலங்களில் பல போராட்டங்களுடன் வாழ்வாதாரத்தை கடத்தும் சம்பூர் மக்கள் இந்த அரசாங்கத்திலும் போராட்டங்களுடன் வாழ வேண்டியுள்ளது.
அப்பாவி மக்களின் காணிகளை இந்தியாவுக்கு தாரை வார்த்து கொடுக்கும் இந்த அரசாங்கம் கடந்த காலத்தில் எதிர்க்கட்சியில் இருக்கும் போது திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த தற்போதைய ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் இதற்கு எதிராக குரல் கொடுத்தார்கள் .பல போராட்டங்களை வீதியில் முன்னெடுத்தார்கள் ஆனால் தேசிய மக்கள் சக்தியின் ஆளுந்தரப்பை சேர்ந்த இவர்கள் இப்போது மட்டும் வாய்மூடி மௌனிகளாக உள்ளார்கள்.
அனைத்து மக்களையும் இடம்பெயரச் செய்ததுடன்...
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கிழக்கு ஆளுனருக்கு வழங்கப்பட்ட மனுவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச பொறிமுறைகளால் கையகப்படுத்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான 1658 ஏக்கர் 04 றூட் 35.38 பேச் அளவுகளைக் கொண்ட எமக்கு சொந்தமான குடியிருப்பு மற்றும் தொழில் ஏக்கர் நிலங்களை முழுமையாக விடுவித்து நாம் வாழ்வதற்காகவும் ஜீவனோபாயத்தினை முன்னெடுக்கவும் உதவுமாறு கிழக்கு மாகாண ஆளுனர் அவர்களை வேண்டுகின்றோம்.
மேன்மை தங்கிய ஜனாதிபதியின் தலைமையின் கீழ், வரலாற்றில் முதல் முறையாக, தேசிய மக்கள் சக்தி அமைத்த அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
இன்று எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வுகளை வழங்க தற்போதைய அரசாங்கம் அதிகாரம் கொண்டுள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
அந்த வகையில் கடந்த 2006ம் ஆண்டு இலங்கையின் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற பாரிய யுத்தமானது எமது மேற் கூறப்பட்டுள்ள பிரதேசத்திலுள்ள அனைத்து மக்களையும் இடம்பெயரச் செய்ததுடன், சமூக பொருளாதாரக் கட்டமைப்புக்களையும் பெரிதும் பாதித்திருந்தமை தாங்கள் அறிவீர்கள்.
இந்நிலையில், பிரதேச மக்களாகிய நாங்கள் இடம்பெயர்ந்த நிலையில் எங்களுக்கு சொந்தமான தொழில் காணிகளும் ஒருபகுதி குடியிருப்புக் காணிகளுமாக 603 ஏக்கர் 02 றூட் அளவு கொண்ட காணிகள் (அனல் மின் நிலையத்திற்கு 505 ஏக்கர்.மின்சார சபைக்கு 40 ஏக்கர் மற்றும் நிலக்கரி மற்றும் நீர் கொண்டு செல்வதற்கான வீதிக்கெனப் பெறப்பட்ட 58 ஏக்கர் 02 றூட் காணிகள் இதில் அடங்குகின்றது.
எந்த விதமான சட்ட ஒழுங்குகளும் இன்றி அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளுக்காக அரசால் எடுக்கப்பட்டது.
அதுமாத்திரமின்றி சம்பூர் மக்கள் 02ம் கட்டமாக குடியேற்றப்படவிருந்த மக்களது 176 ஏக்கர் குடியிருப்புக் காணிகளில் இலங்கை கடற்படை முகாமிட்டு இருந்தது.
மேலும், இலங்கை கடற்படையினரால் பலார்காரமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 108 குடும்பங்களுக்கு சொந்தமான 207 ஏக்கர் குடியிருப்பு மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான காணிகளை விடுவித்து தருமாறு வேண்டுகின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடகிழக்கில் தான் அரச துறைசார் தேவைகளுக்காக
மக்களின் பூர்விக காணிகளை நம்பி விவசாயம், சேனைப் பயிர்ச் செய்கை வாழ்வாதாரங்களை அமைத்துக் கொண்டாலும் இந்தியா இலங்கை ஒப்பந்தம் மூலமாக மக்கள் காணிகள் கையகப்படுத்தப்படுகிறது.
இது குறித்து சம்பூர் பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தெரிவிக்கையில் " ஜனாதிபதி அநுரவை நாங்கள் கடவுளாக நினைக்கிறோம். கபளீகரம் செய்யப்பட்ட காணிகளை பெற்றுத் தாருங்கள் சோலர் திட்டத்தை செய்தாலும் எங்களது காணிகளை தரவேண்டும் 2006ஆம் ஆண்டு யுத்த சூழ் நிலையின் பின்பு வாழ்கின்றோம்.
இங்கு ஐந்து குளங்கள் உள்ளது இந்த குளமும் விவசாய காணியும் எங்களுக்கு வேண்டும் இதனை அப்பால் உள்ள காடுகளை நீங்கள் திட்டங்களுக்காக பயன்படுத்துங்கள் என்றார்.
"அரிசியை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் நீங்கள் விவசாயத்தில் புரட்சி காண வேண்டும் என்று சொல்லி விட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறீர்கள் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான பல திட்டங்களை கையாளுங்கள்
அதனை விடுத்து சோலர் பவர் என்ற போர்வையில் காணிகளை சூறையாடாதீர்கள் என சம்பூரில் தனது காணியை இழந்த விவசாயி ஒருவர் இவ்வாறு தெரிவிக்கிறார்.
எனவே தான் ஒட்டு மொத்தமாக அநேகமான காணிகள் வடகிழக்கில் தான் அரச துறைசார் தேவைகளுக்காக மக்களின் காணிகளை அபகரிக்கிறார்கள்.
இவ்வாறான நிலையில் மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்காத வகையில் தங்களது திட்டங்களை முன்னெடுத்தால் அது நல்லதொரு வரவேற்கத்தக்க விடயமாகும் என்பதே மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு, 15 April, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

viral video: கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்... குட்டிகளை காப்பாற்ற யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல் Manithan

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam
