அரசாங்கத்தின் தீர்மானங்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு தெரியாது: சரத் வீரசேகர
அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து ஆளுங்கட்சி எம்.பி.க்களுக்கும் தகவல்கள் வழங்கப்படுவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளுங்கட்சியின் சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
எட்கா உடன்படிக்கை
குறித்த கடிதத்தில், இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்தல், இலங்கையின் விமான நிலையங்களின் முகாமைத்துவத்தை இந்திய நிறுவனங்களிடம் கையளித்தல், எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படல், போன்ற விடயங்களில் அரசாங்கம் இதுவரை எவ்வகையான தீர்மானங்களை எடுத்துள்ளது என்பதை நான் உட்பட ஆளுங்கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்திருக்கவில்லை.
அது தொடர்பான தகவல்களும் உரிய முறையில் எங்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், அவ்வாறான செயற்பாடுகள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக ஊடகங்கள் மூலமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதியளவு தகவல்களை அறிந்திராத நிலையில், பொதுமக்கள் முன்னிலையில் அசௌகரியத்துக்குள்ளாக நேருகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்துடன் தொடர்புடைய தீர்மானங்கள் தொடர்பில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறும் அவர் தனது கடிதம் மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |