முன்னைய ஆட்சியாளர்கள் இடைநிறுத்திய திட்டங்களை முன்னெடுக்க மும்மடங்கு செலவு!
முன்னைய ஆட்சியாளர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர், இடைநடுவில் நிறுத்தப்பட்ட செயற்திட்டங்களை முன்னெடுக்க மும்மடங்கு செலவழிக்க நேர்ந்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
மொனராகலை மருத்துவமனையில் புதிதாக திறக்கப்பட்ட ஐந்து மாடிக்கட்டிடமொன்றைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மொனராகலை மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்ட ஐந்து மாடிக் கட்டிடம், ஆகஸ்ட் 2019-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கி பெப்ரவரி 2022-க்குள் முடிக்கும் வகையில், இரண்டரை ஆண்டுகளில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்ட ஒரு திட்டமாகும்.
கட்டுமானப் பணிகள்
இதன் கட்டுமானப் பணிகள் 793 மில்லியன் ரூபா செலவில் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கட்டுமானம் நிறுத்தப்பட்டதிலிருந்து, அதன் மதிப்பிடப்பட்ட மொத்தச் செலவு 2961 மில்லியன் ரூபாவாகும்.

இதுவரை 1400 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. 4 அறுவை சிகிச்சை அறைகளின் பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் இந்த ஆண்டு அதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்று முடக்கப்பட்ட 69 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்தத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம், ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட தொகையை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாகச் செலவிடப்பட்டுள்ளது.
நிதி
இருப்பினும், அனைத்துத் திட்டங்களையும் நிறைவு செய்வதற்கு கருவூலத்திலிருந்து நிதி ஒதுக்கப்படும் . இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்களின் மொத்தச் செலவு 59 பில்லியன் ரூபாவாகும்.

அந்த 59 திட்டங்களும் குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டிருந்தால், 28 பில்லியன் ரூபா செலவில் அவற்றை நிறைவு செய்திருக்க முடியும்.
நிதியை முறையாக ஒதுக்கத் தவறியதால், தொடங்கப்பட்ட பணிகளை நிறைவு செய்ய தற்போது 45 பில்லியன் ரூபா செலவிட வேண்டியுள்ளது என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.