கடற்றொழிலாளர்களுக்கு ரோலர் படகுகளை பெற்றுக்கொடுக்க தயார் : நற்குணம் தெரிவிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் ரோலர் படகுகள் தேவையான கடற்றொழிலாளர்கள் தமது சங்கங்களுடாக மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய கூட்டுறவு சங்கத்திடம் கோரிக்கை முன் வைத்தால் அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக அதன் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் இன்றையதினம்(30.03.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பல்வேறு போராட்டங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், அத்துமீறிய இந்திய கடற்தொழிலாளர்களுக்கு எதிராக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் அதன் வெற்றி தற்போது உணரப்படுகிறது.
தொடர்ச்சியாக அத்துமீறி எமது கடற்பரப்புக்குள் வருகை தரும் இந்திய கடற் தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுவரும் நிலையில் தொடர்ச்சியாக கைதுகள் இடம்பெற வேண்டும்.
அண்மையிலும் யாழ் இந்தியத் துணைத் தூதரகத்திற்கு அருகாமையில் நான்கு கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுக்கப்பட்ட கோரிக்கை
போராட்டப் பந்தலுக்கு வருகை தந்த அமைச்சரிடம் எமது கடற்பரப்புக் அத்துமீறி வருகை தந்த நிலையில் கைது செய்யப்பட்ட இந்தியா கடற்றொழிலாளர்களிடம் கைப்பற்றப்பட்ட ரோலர் படகுகளை எமக்குத் தாருங்கள் என கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை அமைச்சர் ஏற்றுப் படகுகள் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்த நிலையில் இதுவரை எந்த கடற்றொழிலாரும் ரோலர் படகுகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கவில்லை.
ஆகவே கடற்றொழிலாளர்களுக்கு ரோலர் படகுகளை வழங்குதற்கு தயாராக இருக்கிறோம் தேவையானவர்கள் தமது விண்ணப்பங்களை வழங்குமாறு அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |