சக மனிதனைப் போல வாழ ஒத்துழைப்பினை நல்குங்கள்..! ரொபர்ட் பயஸ் கடிதம்
எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இன்றி சக மனிதனைப் போல வாழ விரும்புவதாகவும் அதற்கு தாங்கள் முழு ஒத்தழைப்பினை நல்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ரொபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“நீண்ட சிறைவாசத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு கடந்த 12-11-2022 முதல் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்காக சிறப்பு முகாமில் ஒன்றரை வருடங்களாக தங்ககவக்கப்பட்டு உள்ளோம்.
விடுதலை வாழ்வு
எஞ்சியிருக்கும் இறுதி காலத்தையாவது இழந்துபோன வாழ்க்கையின் எஞ்சிய நம்பிக்கையில் மனைவி பிள்ளைகளோடும், பேரக் குழந்தைகளோடும், சகோதர சகோதரிகள் மற்றும் இதர உறவினர்களோடு கழிக்கலாம் என எண்ணியிருந்தோம்.
இத்தனைக் காலமும் தமிழ் மக்கள் உளப்பூர்வமாக எங்களுக்கு பல்வேறு வழிகளில் உறுதுணையாக இருந்துள்ளார்கள். எங்கள் வாழ்வில் எட்டாக் கனியாக இருந்த விடுதலை வாழ்வு இன்று கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது” - என்றுள்ளது.
திருச்சி சிறப்பு முகாம்
அதேவேளை, ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ் ஆகியோரை அவர்களது குடும்பத்தினரிடம் இணைப்பதற்கு ஆவனசெய்யுமாறு தமிழ்த் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது,
ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட நால்வரில் ஒருவரான சாந்தன் போதிய மருத்துவ சிகிச்சையின்மையால் கடுமையான உடல்நலக் குறைவுக்கு உட்பட்டு உயிரிழந்தார்.
ஏனைய மூவரும் 2022.11.12ஆம் திகதி முதல் இன்றுவரை திருச்சி சிறப்பு முகாமில், சக முகாம்வாசிகள் யாருடனும் பேசவோ பழகவோ, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என்பவற்றில் ஈடுபடவோ அனுமதி மறுக்கப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை கூடிய விரைவில் விடுதலை செய்து அவர்களுடைய குடும்பத்தினரிடம் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் - என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |