வீதிகளைச் சீரமைக்குமாறு புதுக்குடியிருப்பு மக்கள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள பல வீதிகளைச் சீரமைத்து தருமாறு புதுக்குடியிருப்பு மக்களிடம் ரவிகரன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கு 04ஆம் வட்டாரம் கிராம அலுவலர் பிரிவில், பிரதேசசெயலாளரின் விடுதிக்கு எதிரே உள்ள முதலாம் ஒழுங்கை மற்றும் புதுக்குடியிருப்பு, 08ஆம் வட்டாரம், மந்துவில்லில் குழந்தையேசு கோவில் வீதியின், 02ஆம் குறுக்குத்தெரு வீதியிலுள்ள 400மீற்றர் தூரமான வலதுபக்க இரண்டாம் ஒழுங்கை என்பன சீரற்றுக் காணப்படுகின்றது.
இதனால் தாம் பலத்த போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக அந்தப் பகுதி மக்கள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராச ரவிகரனிடம் முறையீடு செய்துள்ளனர்.
மக்களின் கோரிக்கை
குறிப்பாக பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலைக்கு செல்பவர்கள், பிரதேச செயலகத்திற்கு செல்பவர்கள், விவசாய நடவடிக்கைகளுக்குச் செல்பவர்கள் என பலதரப்பட்டவர்களும் பலத்த சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் சீரின்றிக் காணப்படுகின்ற குறித்த வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன், மக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைபாடுகளையும் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த வீதிகளைச் சீரமைப்பது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.





