இலங்கையை உலுக்கிய கோர விபத்துக்கள்! பின்னணி குறித்து அச்சத்தில் உறையும் மக்கள்(Video)
பிறப்பென்று ஒன்று இருந்தால் இறப்பு நிச்சயம் என்பது யாவரும் அறிந்த விடயமே. ஆனால் அநியாயமாக மனித உயிர்கள் பலியாகும் போது தான் அதை மனம் ஏற்க மறுக்கின்றது.
சிலர் இயற்கையாக மரணம் எய்துவார்கள். சிலர் தவறான முடிவுகளால் மரணிப்பார்கள். சிலர் விபத்துகளால் இறப்பார்கள். இவ்வாறு இறப்புகள் பல வழிகளில் நிகழும்.
இந்த விபத்துகளின் பின்னணியில் நிச்சயமாக யாரோ ஒருவரின் கவனகுறைவும் சுயநலமும் பொறுப்பற்ற தன்மையும் காணப்படும்.
இலங்கையில் ஒவ்வொரு நாட்களும் ஏதோ ஓர் இடத்தில ஒரு விபத்து நடந்துகொண்டு தான் இருக்கின்றது. சிறு குழந்தைகள் முதல் பெண்கள், ஆண்கள், முதியவர்கள் என பரிதாபமாக ஒரு உயிர் இந்த மண்ணை விட்டு செல்கின்றது.
அதை பார்த்து பரிதாபத்துடன் கடந்து போவதில் என்ன நிகழ்ந்து விட போகின்றது? இதற்கு யார் காரணம்? ஏன் இப்படி நிகழ்ந்தது? என்ன செய்தால் இவற்றை தடுக்க முடியும்? இறப்பவர்களின் குடும்பத்திற்கு யார் பொறுப்பு? விபத்தை ஏற்படுத்திய அனைவரும் தண்டிக்கபட்டார்களா? என பல கேள்விகள் எழுகின்றன.
ஒரு நாளைக்கு எத்தனை விபத்துகள்?
ஒரு விபத்து தொடர்பில் இவ்வளவு கேள்விகள் கேட்க முடியும் என்றால் ஒரு நாளைக்கு எத்தனை விபத்துகள்....?
இவ்வருடம் (2023) கடந்த 6 மாதங்களில் 1192 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஜூலை 9ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் வீதி விபத்துகளில் சிக்கி இவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர் என கூறியுள்ளார்.
11 ஆம் திகதி முதல் 12 திகதி வரையில் பதிவான 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 98 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
9 ஆம் திகதி முதல் 10 திகதி வரையில் பதிவான 24 மணி நேரத்தில் 5 பஸ் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தகவல்.
கடந்த 09.07.2023 அன்று இரவு இடம்பெற்ற பொலனறுவ-மன்னம்பிடிய பஸ் விபத்து 12 பேர் உயிரிழந்தனர், 41 பேருக்கு மெடபாட்டொர் காயமடைந்தனர்.
இதேவேளை தலவாக்கலையில் 50 அடி பள்ளத்தில் விழுந்த பஸ் விபத்தில் 24 பேர் காயமடைந்தனர்.
கடுகித்துல பிரதேசத்தில் நடந்த பஸ் விபத்து. கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை வாயிலில் நடந்த பஸ் விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.
அனுராதபுரம் - குருநாகல் வீதி அபன்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் , 29 பேர் காயமடைந்தனர்.
இப்படி ஒவ்வொரு நாளும் ஏதோ ஓர் விபத்து சம்பவம் பதிவாகின்றது.
இது இலங்கையில் மட்டும் தானா நடக்கின்றது என்று கேட்டால், ஏனைய நாடுகளை விட இலங்கையில் நிகழும் அநியாய மரணங்கள் அதிகம் தான்.
எட்டு போடாமல் சாரதி அனுமதி பத்திரம் பெற்றதை பெருமையாக பேசும் நாடல்லவா இலங்கை.
என்ன காரணம்..?
இதற்கு பல காரணங்கள் உள்ளன.
மேற்கத்திய நாடுகளில் கடைபிடிப்பது போன்ற இறுக்கமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் இலங்கையில் இல்லை.
நாட்டில் பல வீதி விதிகள் உள்ளன. அதை கடைபிடிப்பது மிக குறைவு. சட்டங்களை மக்கள் மதிப்பது பெரும்பாலும் குறைவு.
அதிகவேகம், குடித்துவிட்டு வாகனம் செலுத்துவது, தலை கவசம் அணிவதில்லை, ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் செல்வது, அடுத்தவனை விட வேகமாக செல்வத்தற்கு வீதியில் போட்டி போடுவது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இது மக்கள் செய்யும் தவறென்றால் இதை செய்யும் அளவிற்கு நடந்துகொண்ட பெருமை நமது போக்குவரத்து கட்டுப்பாடு பொலிஸ் அதிகாரிகளையே சேரும்.
தெரிந்தே செய்யப்படும் தப்புகளுக்கு கடுமையான தண்டனை கொடுப்பதில் தவறில்லை.
சில போக்குவரத்து கட்டுப்பாடு பொலிஸ் அதிகாரிகள் இலஞ்சம் பெற்றுக்கொண்டு தமது சேவையை சரிவர செய்வதில்லை.
முறையாக பயிற்சி பெறாத வாகன சாரதிகளுக்கு சாரதி அனுமதி பத்திரம் வழங்குதல். தலைக்கவசம் இல்லை என்றாலும் மது அருந்தி இருந்தாலும் காசு வாங்கி விட்டு அவர்களை கண்டுகாமல் விடுவது. இதனால் முறையாக பயணிக்கும் பயணிகளும் பாதிக்கபடுவார்கள்.
அதிலும் பொது சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கான சாரதி அனுமதி பத்திரங்களை வழங்கும் போது அதிக கவனம் தேவை.
பொது சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதிகள் தொலைபேசி அழைப்புகளில் பேசி கொண்டு செல்வது. அரச போக்குவரத்து தனியார் போக்குவரத்து என்பன போட்டிபோட்டு வாகனம் செலுத்துவது. பாதைகள் ஒழுங்கில்லை என தெரிந்தும் வேகமாக செல்வது. மிதிப்பலகையில் மக்கள் தொங்கிக்கொண்டு செல்லும் அளவிற்கு ஆட்களை பேருந்தில் ஏற்றுவது என மனித உயிர்களுடன் விளையாடுகின்றனர்.
அனைவருக்கும் தனி வாகனத்தில் செல்லும் அளவிற்கு வசதியில்லை. இன்றும் பலர் அரச சேவைகளை நம்பி மட்டுமே வாழ்கின்றனர் என்பதை பொது சேவையில் இருப்பவர்கள் மறக்ககூடாது.
இலங்கையை உலுக்கிய பேருந்து விபத்து
இலங்கையை உலுக்கிய மன்னம்பிட்டிய பேருந்து விபத்து தொடர்பில் மூன்று வருடங்களுக்கு முன்னரே ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதை 12 பேர் உயிர் நீத்து நிரூபிக்க வேண்டிய அவலநிலையிலே இலங்கையின் போக்குவரத்து சேவை உள்ளது.
அதாவது 2020 ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி குறித்த பேருந்தின் செயற்பாடு குறித்து ஒருவர் அதிருப்தி தெரிவித்து தனது முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவானது தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அப்பதிவில் குறித்த பேருந்தானது பயணிகளின் உயிரைக் கருத்தில் கொள்ளாது மிகவும் வேமாக பயணிப்பதாகவும் எதிர் திசையில் வாகனம் வந்தாலும் அவற்றுக்கு இடம்கொடுக்காமல் முந்தி லெ்வதாகவும், எனவே விரைவில் மக்களின் உயிரை அந்த பேருந்து காவுவாங்கப்போகிறது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோன்று ஜனவரி 20ஆம் திகதி நானுஓயா - ரதெல்ல பகுதியில் கொழும்பில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று வான் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுடன் மோதுண்டதில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 51 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
இதன்போது, வானில் பயணித்த 9 பேரில் ஆறு பேரும் முச்சக்கர வண்டி சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பதுளை – பசறை பகுதியில் லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, 13ஆம் கட்டைப் பகுதியில் சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுமார் 14 பேர் வரையில் உயிரிழந்ததுடன் 31 பேர் காயமடைந்திருந்தனர்.
அரசாங்கமும் அதிகாரியும்
இவ்வாறு பல விபத்து சம்பவங்கள் நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒவ்வொரு இடங்களிலுள்ள போக்குவரத்து பிரச்சினைகளை மக்கள் முன்வைத்தாலும் அதை கவனித்தில் கொள்ளாமல் கடந்து செல்கின்றது அரசாங்கம். பாதைகள் அபிவிருத்தி செய்யப்படவில்லை. வீதி சமிஞ்சை விளக்குகள் ஒழுங்காக செயற்படுவதில்லை. ஒழுங்கு விதிகளை மீறுபவர்களை விடுத்து பாதிக்கப்பட்டவரை தண்டித்தல். இலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை அரசாங்கம் தண்டிப்பதில்லை. இரவு வேளைகளில் கண்காணிப்பு பணிகளில் போக்குவரத்து பொலிஸார் பணிபுரிவதில்லை.
இன்னும் சில கிராமங்கள் கிராமங்களாகவே இருபதற்கு இதுவும் ஒரு காரணம்.
பல கிராமங்களில் பாதைகள் குன்றும் குழியுமாக காணப்படுகின்றன. அவற்றை தேர்தல் வாக்குறுதிகளின் போது மட்டும் சீர் செய்வதாக கூறுவது. பல கிலோ மீட்டர் இன்றும் மாணவர்கள் நடந்தே செல்கின்றனர். இப்படி எத்தனை அவலங்கள் இந்த போக்குவரத்து ஒழுங்கின்மையால்.
அரசாங்கம், அதிகாரிகள், பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் இவர்கள் விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமானவர்கள் ஆனால் மூல காரணம் நமது மக்கள்.
மக்களால் உருவாக்கபடுவது தான் அரசாங்கம். மக்களுக்காக சேவை செய்ய தான் அதிகாரிகள். மக்கள் நினைத்தால் தான் எந்த பேருந்தும் அவர்கள் ஊருக்குள் செல்லவும் முடியும் சேவையில் இருக்கவும் முடியும்.
மக்கள் நினைத்தால்...
இங்கு மக்கள் மத்தியில் வன்முறையை தூண்டவில்லை. உரிமையை இழந்து இப்போது உயிரையும் இழக்க வேண்டாம் என்கிறோம்.
கிராமங்களுக்கு தேர்த்தல் காலத்தில் வருபவர்கள் வீதியை செய்து கொடுத்து தமது வாக்குறுதியை நிறைவேற்றினால் மட்டும், அடுத்த தடவை தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவிடுங்கள். அது உங்கள் உரிமை. அது ஊர் மக்களின் ஒற்றுமையிலும் உள்ளது.
நீங்கள் சரியாக வீதி விதிகளை கடைபிடிக்கிறீர்கள் என்றால் சம்பளம் வாங்கிக்கொண்டும் இலஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை நீங்களே எடுக்கலாமே? ஏன் தலை சொரிந்து காசு கொடுக்க வேண்டும்? அது உங்கள் உயிரை மட்டுமல்லாமல் மற்றவர்களில்ன் உயிரையும் பறிக்குமல்லவா?
சட்டத்தை சரியாக கடைப்பிடிப்பதில் அப்படி என்ன கஷ்டம்? கஷ்டம் என்றால் ஏன் அதை செய்ய வேண்டும்?
உங்கள் ஊருக்கு செல்லும் பேருந்துகளில் பெரும்பாலும் அடிக்கடி உங்கள் ஊர் மக்கள் தான் செல்வார்கள். பாதை சரியில்லை என்றால் அதில் கவனமாக பயணிக்க சொல்லுங்கள். அரச பேருந்தோ தனியார் பேருந்தோ மக்கள் பயணிக்கவில்லை என்றால் யாருக்காக அது சேவையில் இருக்க வேண்டும்?
மக்களை பாதுகாப்பாக பயணிக்க செய்யாமல் மது போதையிலும் அதிக வேகத்திலும் பயணிக்கும் பேருந்துகள் தொடர்பில் வெளி உலகிற்கு அறியப்படுத்துங்கள்.
இப்போது எதுக்கெடுத்தாலும் சமூக ஊடகங்களில் ஒரு காணொளியை பதிவு செய்யும் நாம் இவ்வாறான தவறான செயற்பாடுகளை வெளி உலகிற்கு அறியபடுத்துவதிலும் அக்கறை செலுத்தலாம். அதனால் என்ன மாறிவிட போகின்றது என்பதை விட தவறை சுட்டிகாட்ட ஆரம்பித்தாலே அங்கு சிறு மாற்றம் என்றாலும் நிகழலாம் அல்லவா?
இப்படி பல வழிகளில் பல நடவடிக்கைகள் எடுத்தாலும் தலை வழியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது போல அவர்களின் உறவுகளை இழக்கும் வரை சிலருக்கு அடுத்தவரின் வலி தெரியாது.
தண்ணீரில் மூழ்கிய கனவுகள்
மன்னம்பிட்டி பேருந்து விபத்தில் பல உயிர்கள் பறிபோனது ஆனால் அனைத்து உயிர்களையும் பலிகொடுத்த சாரதியின் கவனயீனத்தில் என்ன மாறிவிட போகின்றது. சில நாட்களில் மீண்டும் பேருந்தில் சவாரி செய்ய ஆரம்பிப்பார்.
எத்தனை பேரின் ஒரே பிள்ளை இந்த விபத்தில் இறந்திருப்பார்களோ? எத்தனை பேரின் கனவுகள் தண்ணீரில் மூழ்கியதோ?
அரசாங்கம் என்ன செய்ய போகிறது பெரிய பெரிய மாற்றங்களை செய்யும் நாட்டின் ஜனாதிபதி மக்களின் சாதாரண தேவைகளை அறிந்து செயற்பட வேண்டும். போக்குவரத்து சட்டங்களை கடுமையாக்க வேண்டும். அதிகாரிகள் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும்.
மக்களும் தங்களுக்கு பாதுகாப்பில்லாத சேவைகளை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்வதை விடுத்து தங்கள் தேவைகளில் உறுதியாக இருக்க வேண்டும். அரசாங்கத்தின் சட்டங்களை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
விபத்துக்கள் எதிர்பாராமல் நடப்பவை அவர்களின் விதி அவ்வளவு தான் என கடந்து போக இன்னும் எத்தனை உயிர்களை பறிகொடுக்க போகின்றோம்...?