நீரால் மூடியிருக்கும் பாதையினால் சிரமத்தை எதிர்கொள்ளும் மக்கள்: கண்டுகொள்ளாத மாவட்டச் செயலகம்.
முல்லைத்தீவில் வீதியொன்றை மூடியிருக்கும் நீரினால் அப்பாதையினை பயன்படுத்தி வந்த மக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவில் வில்லுக்குளம் பகுதியில் உள்ள இந்த பாதையினை 500 இற்கும் அதிகமானோர் பயன்படுத்தி வரும் நிலையில் அது வருடத்தின் கால் பகுதியிலும் கூடிய நாட்கள் நீரால் மூடியிருக்கின்றதாக மக்கள் சினத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த பாதையினை பயன்படுத்த முடியாத சூழலில் சுற்றுப் பாதைகளை பயன்படுத்த வேண்டியதாய் இருக்கின்றது.இதனால் சுமார் ஒரு கிலோமீற்றர் நீளத்திற்கு உள்ள பயணத்தை மூன்று கிலோமீற்றரிலும் கூடிய தூரத்திற்கு பயணப்பட வேண்டியதாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களும் வயோதிபர்களும் அதிகளவில் சிரமங்களுக்கு ஆளாக நேரிடும் சூழலில் இதற்கொரு தீர்வு பெற்றுத் தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருத்தமற்ற திட்டமிடல்
தீத்தக்கரை தியோகுநகர் கிராமங்களுக்கு செல்லும் இந்த பாதையின் வில்லுக்குளத்தினை ஊடறுத்துச் செல்லும் பகுதியே நீரால் மூடியிருக்கின்றது.
அதிகமாக இரண்டடிக்கும் சில இடங்களில் அரையடிக்கும் இப்போது நீர் உள்ளது.இதுவே மழைக்காலத்தில் மூன்றடிக்கும் அதிகமாக நீர் நிரம்பியிருக்கும்.
சுமார் 100 மீற்றர் நீளமான இந்த பகுதியில் 75 மீற்றர் அளவில் கொங்றிற்றால் பாதை அமைக்கப்பட்டுள்ளதோடு பாதைக்கு குறுக்காக குளத்து நீரின் நீரோட்டத்திற்காக மதகு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
பாதையினை அமைக்கும் முன்னர் அதன் நிலம் மண் இட்டு உயர்த்தப்பட்டு கொங்கிறிற்று பாதையினை அமைத்திருக்க வேண்டும்.அப்படி நடந்திருந்தால் நீரால் மூழ்கடிக்கப்படும் நிலை வந்திருக்காது என இந்த பகுதியினை பார்வையிட்டு கருத்துரைத்த பொறியியலாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய நிலத்தில் பாதையமைக்கும் போது குளத்தின் பகுதிகளை முழுமையாக கடக்கும் வகையில் பாதையினை முழுநீளத்திற்கும் அமைக்க திட்டமிட்டிருக்க வேண்டும்.சுமார் 25 மீற்றர் நீளமான பாதை கொங்கிறிற்று பாதை அமைக்கப்படாது உள்ளது கவலைக்குரிய விடயமாகும்.
இந்த நிலையினால் பொதுமக்கள் அதிகமாகவே பாதிக்கப்படுவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பயனற்ற மதகு
அளம்பில் முல்லைத்தீவு பாதையிற்கு சமாந்தரமாக கடற்கரையினால் செல்லும் பாதையுடன் இணைப்பினை ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த பாதையில் வில்லுக்குளத்தினை ஊடறுக்கும் பகுதியில் அமைக்கப்பட்ட மதகு நீரில் மூழ்கியுள்ளது.
நீரில் மூழ்கிய பாதைவழியே நடந்து சென்றால் பாதையின் உயரத்தை விடவும் மதகு உயரமாக இருப்பதை அவதானிக்கலாம். இருந்தும் மதகினை எல்லைப்படுத்தி காட்டும் இருபக்கமும் உள்ள இரட்டை முட்டுக்களின் நுணிப்பகுதியினை நீரின் மீது அவதானிக்க முடிகின்றது.இதனை சுட்டும் விதத்தினை படத்தில் காணலாம்.
வில்லுக்குளங்களை ஊடறுத்து அமைக்கும் பாதைகளின் அமைப்பு முறையினை அவ் குளங்களில் சேரும் நீரினால் ஏற்படும் நீர்மட்ட உயரத்தினை அவதானித்து திட்டமிட்டிருக்க வேண்டிய சூழலில் இது அவ்வாறு இல்லை என்பதை இன்றைய நிலை சுட்டிக்காட்டுகின்றது.
இதனை மேற்பார்வை செய்து கொண்ட அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் கேள்வியெழுப்பும் நிலையினை வீதியின் இன்றைய நிலை ஏற்படுத்தியுள்ளது.
கண்டுகொள்ளாத மாவட்டச் செயலகம்
முல்லைத்தீவு நகரில் இருந்து தெற்கு நோக்கி நான்கு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இந்த பாதையின் நிலை தொடர்பில் பிரதேச செயலகம் கண்டுகொள்ளாது இருந்து வருகின்றது.
பாதையில் அபிவிருத்தி மேற்கொண்ட பின்னரும் அது பயனற்று இருப்பது தொடர்பில் அந்த திட்டமிடலை மேற்கொண்டு ஒப்பந்தத்தை வழங்கியிருந்த மற்றும் அந்த வீதியினை பராமரித்து வரும் பொறுப்பில் உள்ள நிறுவனம் உள்ளிட்ட துறைசார்ந்தோர் கண்டுகொள்ளாதது அவர்களின் பொறுப்புணர்ச்சியற்ற செயற்பாட்டையே எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
பல வருடங்களாக இந்த பாதையின் நிலையினை சீர்செய்து மாற்றத்தை ஏற்படுத்த யாரொருவரும் இதுவரை நடவடிக்கைகளை எடுக்க முன்வரவில்லை.இந்த நிலையில் இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகமே நடவடிக்கைகளை முன்னெடுத்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
ஆனாலும் அவர்கள் இது தொடர்பில் எத்தகைய தேடலையும் செய்துகொள்ளவில்லை போல் உள்ளது என இந்த பாதையின் பொறுப்புவாய்ந்த தீர்வுகள் தொடர்பில் கருத்துரைத்த சமூக ஆர்வலர் ஒருவர் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இது போன்ற அபிவிருத்தியின் பின்னர் பொருத்தமான பயன்பாடற்ற நிலையில் உள்ள பல பாதைகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அப்பாதைகளை பராமரிக்க வேண்டிய பிரதேச சபைகளோ அல்லது அவற்றை நிர்வகிக்கும் பிரதேச செயலகங்களோ இவற்றின் பயன்பாட்டு நெருக்கடிகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்சியற்ற நிலையிலேயே நாட்களை கடந்து செல்கின்றன என்பதை மேற்கொண்ட தொடர்ச்சியான அவதானிப்புக்களை அடிப்படையாக கொண்டு திட்டவட்டமாக கூறமுடியும் என்பதும் இங்கே நோக்கத்தக்கது.
இதனடிப்படையில் இந்த பாதையின் வினைத்திறனான பயன்பாட்டுக்கு மாவட்டச் செயலகத்தின் தலையீடு அவசியமாகும் என்ற கூற்றும் பொருத்தமானதாக இருக்கும்.