நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகளின் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தம்
நிதி பற்றாக்குறையால் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி கிடைக்கும் வரை அதிவேக நெடுஞ்சாலைகள், ஏனைய வீதிகளின் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் தெரிவித்துள்ளார்.
மூன்று நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகளான ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை, மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் தம்புள்ளை பிரிவு மற்றும் கண்டி பிரிவுகளின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பல வீதிகள் நிதிப் பிரச்சினை காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கார்ப்பெட் போடும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளதாக வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.
வீதிகள் பராமரிப்பு இன்மையால் பாதிப்பு
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம வரையான பகுதியின் நிர்மாணப் பணிகள் மிகவும் மந்தகதியில் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் கிடைத்தவுடன் பணிகள் செயற்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வீதி நிர்மாணத்திற்கு தேவையான மூலப்பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளதாகவும், பொருளாதார நிலைமை காரணமாக கட்டுமான மூலப்பொருட்களின் இறக்குமதியும் நிறுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பல வீதிகள் முறையான பராமரிப்பு இன்மையால் பாழடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.