ரிஷாட் பதியுதீனின் கைது திட்டமிட்ட அடிப்படையிலானது - மக்கள் காங்கிரஸ் தெரிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடனோ அதன் சூத்திரதாரிகள் மற்றும் தற்கொலைதாரிகளுடனோ முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொறுப்புடன் கூறுவதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
இதன்போது, கட்சியின் தவிசாளர் அமீர் அலி கருத்துத் தெரிவிக்கையில்,
அநீதியான முறையில் இந்தக் கைது இடம்பெற்றிருக்கின்றது. ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் ரிஷாட் பதியுதீன், இந்த நாட்டின் சிறுபான்மை சமூகம் ஒன்றின் தலைவராகவும் விளங்குகின்றார். அவர் இவ்வாறு அருவருப்பாகவும், அசிங்கமாகவும் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட வேண்டுமானால், சபாநாயகரின் அனுமதி பெறப்படல் வேண்டும். அல்லது கைது செய்யப்படுவதற்கான காரணமேனும் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால், கைது செய்ய வந்தவர்கள் இவரை எப்படியாவது கொண்டுசெல்ல வேண்டும் என்பதிலேயே முனைப்பாக இருந்தனர்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட, கொலோசஸ் நிறுவனத்துக்கு பித்தளை வழங்கியது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையிலே தான், கட்சியின் தலைவர் ரிஷாட் இலஞ்ச ஆணைக்குழுவுக்கு கடந்த வாரம் சென்று, இது தொடர்பில் விசாரணை செய்து, உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த காலங்களில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலும், ரிஷாட் பதியுதீனுக்கு ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் எந்தத் தொடர்பும் இல்லையென தெரிவிக்கப்பட்டது. அப்போதைய பதில் பொலிஸ்மா அதிபரும், தற்போதைய பொலிஸ்மா அதிபருமான சி.டி.விக்ரமரத்னவே இவ்வாறு எழுத்துமூலம் அறிவித்தார்.
எமது தலைவரின் கைது சட்டவிரோதமானது. ஜனநாயகத்துக்கு விரோதமானது. இந்தக் காட்டுமிராண்டித் தனமான அரசியல் சித்தாந்தம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற பிரார்த்தனையையே எமது கட்சி அபிமானிகள் இந்த புனித ரமழானில் இறைவனிடம் கேட்க வேண்டும், அதேபோன்று இதே பிரார்த்தனையை இந்த நாட்டு முஸ்லிம்களும் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் கருத்து தெரிவித்த போது,
எமது தலைவர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட முறைமைகள் சரியான விதத்தில் மேற்கொள்ளப்படவில்லை. அறிக்கையில் கூறப்பட்டவாறு இதுவரை எந்தவொரு நபருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் எதுவும் ஆரம்பிக்கப்படாத நிலையில், ரிஷாட் பதியுதீன் மாத்திரம் அறிக்கையில் கூறப்பட்டமைக்கு மாற்றமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இது அரசியல் நோக்கம் கொண்டதான கைது என அப்பட்டமாகத் தெரிகின்றது. அவர் திட்டமிட்ட அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் ரிஷாட் பதியுதீனோ அல்லது வேறு எந்த முஸ்லிமோ அல்ல’ என நாடாளுமன்ற விவாதங்களில் இருந்து துலாம்பரமாக தெரிகின்றது.
சூத்திரதாரி வேறு யாரோ என்பதுவும் எல்லோருக்கும் தெரியும். இது சிங்கள சமூகமும் இதை உணரத் தொடங்கியுள்ளது. ரிஷாட் பதியுதீன் மீது எத்தனையோ குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, எல்லாமே புஸ்வாணம் ஆகிவிட்ட நிலையில். இப்போது காரணமில்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.